தற்போதைய செய்திகள்

ரேஷன்கடை ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

சென்னை

ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதியளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது பல்லாவரம் தொகுதி தி.மு.க. உறுப்பினர் கருணாநிதி பல்லாவரம் தொகுதியில் உணவு மற்றும் நுகர்பொருட்கள் வழங்கல்துறை உதவி ஆணையாளர் அலுவலகம் அமைக்க அரசு முன் வருமா? என்று கேட்டார்.

இதற்கு பதில் அளித்த உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ், பரங்கிமலை மண்டலத்தில் 114 முழு நேர நியாய விலைக்கடைகள் செயல்படுகின்றன. இதில் பரங்கிமலை மண்டலத்திற்குட்பட்ட பல்லாவரம் தொகுதியில் 63 நியாய விலைக்கடைகள், 83 ஆயிரத்து 693 குடும்ப அட்டைகளுடனும், ஆலந்தூர் தொகுதியில் 51 நியாய விலைக்கடைகள் என மொத்தம் 56 ஆயிரத்து 434 குடும்ப அட்டைகளுடனும் இயங்கி வருகின்றன.

மேலும் தாம்பரம் மண்டலத்தில் 108 முழு நேர நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதிலும், தாம்பரம் மண்டத்திற்குட்பட்ட பல்லாவரம் தொகுதியில் 25 நியாய விலைக்கடைகள் மொத்தம் 30 ஆயிரத்து 835 குடும்ப அட்டைகளுடன் செயல்பட்டு வருகின்றன.

பரங்கிமலை மண்டலத்தில் பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மொத்தம் 83 ஆயிரத்து 693 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்ட 63 நியாய விலைக்கடைகளையும், தாம்பரம் மண்டலத்தில் பல்லாவரம் தொகுதிக்குட் பட்ட பகுதிகளில் உள்ள 30 ஆயிரத்து 835 குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ள 25 நியாய விலைக்கடைகளையும் ஒன்றாக இணைந்து பல்லாவரம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் ஒரு தனி மண்டலம் அமைக்கும் பட்சத்தில் பரங்கிமலை மண்டலம் 53 நியாய விலைக்கடைகளுடனும், தாம்பரம் மண்டலம் 83 நியாய விலைக்கடைகளுடனும், குறைவான குடும்ப அட்டைகளுடன் செயல்படும் என்பதால், உறுப்பினரின் கோரிக்கை நிர்வாக ரீதியில் சாத்தியமில்லை என்றார்.

தொடர்ந்து பேசிய உறுப்பினர் கருணாநிதி ரேஷன் கடை ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை என்று கூறினார்.

இதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பதிலளித்து பேசியதாவது:-

உறுப்பினர் கருணாநிதி அவைக்கு தவறான தகவலை தருகிறார்.2010-ம் ஆண்டு சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டதோடு சரி. அதை நடைமுறைப்படுத்தவில்லை. அம்மா ஆட்சியில் தான் சம்பள உயர்வு நடைமுறைப்படுத்தப்பட்டது. தொகுப்பூதியம் பெற்றவர்கள் ஊதியம் பெறுவதற்கான சட்டத்தை தான் நீங்கள் போட்டீர்கள். ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவில்லை. அதை நடைமுறைப்படுத்தியது அம்மா அவர்கள் தான். ரேஷன் கடை ஊழியருக்கு 5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு வழங்குவதற்கான ஆணை பிறப்பித்தீர்கள். அது தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. ரேஷன் கடை ஊழியர்களுக்கு விரைவில் சம்பள உயர்வு அளிக்கப்படும்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பதிலளித்தார்.