தற்போதைய செய்திகள்

வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்-முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் திட்டவட்டம்

கன்னியாகுமரி

வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள் என்று முன்னாள் அமைச்சர் என்.தளவாய் சுந்தரம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

கன்னியாகுமரி கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட மாவட்ட கழகத்தின் சார்பில் விடியா திமுக அரசின் தமிழக மக்களை வாட்டி வதைக்கும் மின்கட்டண உயர்வை கண்டித்தும், மாவட்டத்தில் அனுமதி இன்றி இயங்கும் டாஸ்மாக் பார்கள் மூலம் கொள்ளையடிக்கும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம் தலைமையில் கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால் , குமரி மேற்கு மாவட்ட கழக செயலாளர் டி. ஜாண்தங்கம் ஆகியோரின் முன்னிலையில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும், கழக அமைப்பு செயலாளரும், கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினருமான தளவாய் சுந்தரம் பேசியதாவது:-

பொய்யான வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து அவர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த விடியா தி மு க அரசு தொடர்ந்து மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது. மக்களுக்காக கழக அரசு கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை எல்லாம் விடியா திமுக அரசு ஒவ்வொன்றாக நிறுத்தி வருகிறது.

100 யூனிட்டுக்கு இலவசமாக மின்சாரம் தருகிறோம் என்று திமுக அரசு சொல்லி வருகிறது. இது யார் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது என சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஏழை மக்களுக்காக புரட்சித்தலைவி அம்மாவின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட திட்டம் தான் இது.

மக்களின் அடிப்படைத் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்றார் போல் திட்டங்களை வகுத்து அதனை தந்தது தான் அம்மாவின் அரசு. அதைத்தான் கடந்த காலத்தில் முதலமைச்சராக இருந்த எடப்பாடியார் தந்தார்.

திமுக அரசு ஆட்சிக்கு வரும்போது எல்லாம் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்துவிடும். கல் மண் ஜல்லி என கட்டுமான பொருட்கள் அனைத்தும் உயர்ந்து விட்டன. அது மட்டும் அல்ல அது மட்டுமல்லாது அனைத்திற்கும் தட்டுப்பாடு.

ஏழை மாணவ மாணவியர்கள் கல்வி கற்க வேண்டும் என அவர்களுக்கு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் இலவச மடிக்கணினியை வழங்கினார். அந்தத் திட்டத்தை தொடர்ந்து முதலமைச்சராக இருந்த எடப்பாடியாரும் மாணவ மாணவியருக்கு அளித்தார்.

இதன் மூலம் தமிழகத்தில் 52 லட்சம் மாணவ,மாணவியர்கள் பயன்பட்டார்கள். கொரோனா ஊரடங்கு இருக்கிறது மக்கள் மீண்டு வரும் சூழலில் தற்போது மின் கட்டண உயர்வு வீட்டு வரி உயர்வு சொத்து வரி உயர்வு என ஒவ்வொன்றாக உயர்த்தி மக்களை விடியா தி மு க அரசு வாட்டி வதைத்து வருகிறது.

விடியா திமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் கமிஷன், கலெக்சன், கரப்ஷன், தான் நடக்கிறது. இதைத்தான் திமுகவின் முதலமைச்சர் திராவிட மாடல் என சொல்கிறாரா? .

கன்னியாகுமரி மாவட்டத்தில் முறையான அனுமதி இல்லாமல் 88 டாஸ்மாக் பார்கள் செயல்பட்டு வருகிறது இதன் மூலம் கிடைக்கும் வருமானம் யாருக்கு செல்கிறது கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இதன் மூலம் வாரம் ஒன்றிற்கு ரூ.2.50 கோடி முதல் 3 கோடி ரூபாய் வரை தனிநபருக்கு செல்கிறது.

பேரளவிற்கு 25 மதுபான பார்களுக்கு மட்டும் கிடைக்கும் வருமானம் அரசுக்கு செல்கிறது அரசுக்கு வருமான இழப்பை ஏற்படுத்தி வரும் டாஸ்மாக் கொள்ளையை திமுக அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று மாவட்டத்தில் பேரூராட்சி பகுதிகளில் உறிஞ்சி குழாய் வைக்க வேண்டும் என மாவட்ட அமைச்சரின் தூண்டுதலின் பேரில் மாவட்ட நிர்வாகம் மக்களை கட்டாயப்படுத்தி வருகிறது ..மக்களுக்கு நன்மை செய்யத்தான் ஒரு அரசாங்கம் இருக்க வேண்டும்.

ஆனால் மக்களை பல்வேறு வழிகளில் துன்புறுத்தும் ஆட்சி தேவையா என மக்கள் இப்போது நினைத்து விட்டார்கள். தமிழக முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோது 200 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும் மக்கள் ரூபாய் 170-ஐ கட்டணமாக செலுத்தி வந்தனர்.

தற்போது விடியா திமுக அரசு அதனை 225 ரூபாய் செலுத்தும் அளவிற்கு உயர்த்தி உள்ளது சாதாரண மக்கள் தலையில் 55 ரூபாய் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இந்த அரசு 300 யூனிட் பயன்படுத்தும் மக்கள் அதிமுக ஆட்சி காலத்தில் 530 ரூபாய் தான் செலுத்தி வந்தார்கள்.

ஆனால் தற்போதைய விடியா திமுக அரசில் ரூ.670 செலுத்த வேண்டி உள்ளது. மக்களுக்காக புரட்சித்தலைவி அம்மாவும், எடப்பாடியாரும் கொண்டு வந்த பல நல்ல திட்டங்களை தொடர்ந்து திமுக அரசு நிறுத்தி வருகிறது. இதற்கெல்லாம் வரும் தேர்தலில் பொது மக்கள் நல்ல பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் என்.தளவாய்சுந்தரம் பேசினார்.