தமிழ்நாட்டில் மீண்டும் கழக ஆட்சி அமையும் -முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உறுதி

மதுரை,
தமிழ்நாட்டில் மீண்டும் கழக ஆட்சி உறுதியாக அமையும் என்று முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி ஒன்றியம் செமினிபட்டியில் கழக அமைப்பு தேர்தலில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட கிளை கழக நிர்வாகிகளுக்கு தீர்மான நகல் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஒன்றிய கழக செயலாளர் காளிதாஸ் தலைமை வகித்தார். கொரியர் கணேசன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிளை கழக நிர்வாகிகளுக்கு தீர்மான நகல்களை கழக அமைப்பு செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ., மாவட்ட கழக செயலாளரும, முன்னாள் அமைச்சரும், கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. ஆகியோர் வழங்கினர்.
நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தி.மு.க. அரசு இந்த ஓராண்டில் கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய், கேஸ் சிலிண்டருக்கு மானியம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று மக்களுக்கு நன்றாக தெரியும்.
மேலும் அம்மா ஆட்சியில் வழங்கப்பட்ட திட்டங்களான தாலிக்கு தங்கம் திட்டம், உழைக்கும் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம், அம்மா மினி கிளினிக் போன்ற பல்வேறு திட்டங்களை நிறுத்தியுள்ளனர்.
தற்போது கழக அம்மா பேரவை சார்பில் அம்மா அரசு செய்த சாதனை திட்டங்களையும், ஓராண்டு தி.மு.க. ஆட்சியின் அவலங்களையும் மக்களுக்கு திண்ணை பிரச்சாரம் மூலம் விளக்கி வருகின்றனர்.
அனைத்து கிளை கழங்களிலும் தொண்டர்கள் மத்தியில் மாபெரும் எழுர்ச்சி உருவாகியுள்ளது. நிச்சயம் தமிழகத்தில் மீண்டும் கழக ஆட்சி அமையும். அதை மக்களே எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கழக அம்மா பேரவை செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
தென் மாவட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க முதலமைச்சர் மதுரைக்கு வருகிறார். அவர் தனது தந்தையார் பெயரில் கட்டப்பட்டு வரும் நூலகத்தை ஆய்வு செய்ததாக செய்திக்குறிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. முதலமைச்சர் தனது தந்தையார் சிலை அருகே அமைந்திருக்கின்ற சிம்மக்கல் நூலகத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் அதை ஆய்வு செய்ய வேண்டும் என்று மதுரை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
புரட்சித்தலைவி அம்மாவின் கனவை நனவாக்கும் வண்ணம் முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடியார், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பாரத பிரதமரிடம் அழுத்தம் கொடுத்து மதுரைக்கு எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வந்துள்ளனர்.
இதற்காக அம்மா ஆட்சியில் 224 ஏக்கர் நிலம் மற்றும் ரூ.1500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கும் அந்த வளாகத்தை முதலமைச்சர் ஆய்வு செய்ய முன்வர வேண்டும்.
திட்டங்களை கள ஆய்வு செய்வது மூலமாக தான் அதை நாம் விரைவுபடுத்தி முழுமைப்படுத்த முடியும் என்று முதலமைச்சர் கூறியுள்ளார். ஆகவே எய்ம்ஸ் மருத்துவமனை அமையவிருக்கும் இடத்தினை முதலமைச்சர் ஆய்வு செய்யவரா? என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
தென் மாவட்ட மக்களின் ஜீவாதார பிரச்சினையான முல்லை பெரியாறு அணை குறித்தான உண்மை தன்மையை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டும். இதனால் தென்மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல் மற்றும் ராமகிருஷ்ணன், திருப்பதி, ராஜேஷ் கண்ணா, எம்.கே.மணிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.