உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர உதவுங்கள்-பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் கடிதம்

சென்னை
பிரதமர் நரேந்திர மோடிக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
உக்ரைனில் இருந்து அனைத்து இந்தியர்களையும் வெளியேற்றும் பணியான ‘ஆபரேஷன் கங்கா’வின் கீழ் திரும்ப அழைத்து வந்ததற்காக தங்களுக்கு முதலில் எனது மனமார்ந்த பாராட்டுகளை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கிறேன்.
உக்ரைனின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் சேர்ந்த 14,000-க்கும் மேற்பட்ட இந்திய மருத்துவ மாணவர்கள் இந்தியாவுக்கு திரும்பியுள்ளனர் என்பதும், உத்தரவாதம் இல்லாத எதிர்காலம் காரணமாக அவர்கள் கடுமையான மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் அனுபவித்து வருவதையும் தாங்கள் நன்கு அறிவீர்கள்.
14,000 மாணவர்களில் கிட்டத்தட்ட 1,900 மாணவர்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள். போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து மீட்கப்பட்ட இந்திய மருத்துவ மாணவர்களின் மன நிலை தடுமாற்றத்தில் உள்ளது. டாக்டராக வேண்டும் என்ற நம்பிக்கையில் லட்சக்கணக்கான ரூபாய் செலவு செய்துள்ளனர். இப்போது அவர்கள் என்ன செய்வது என்று புரியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் தங்கள் படிப்பை தொடர மத்திய அரசு போதுமான ஏற்பாடுகளை செய்யும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் நிலையற்ற தன்மையை பற்றி அதிகம் கவலைப்படுகிறார்கள். மேலும் அவர்கள் அனைவருக்கும் வழிகாட்டியாக விளங்கும் பிரதமர் ஒருவரால் மட்டுமே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்று நம்பிக்கை வைத்துள்ளனர்.
இது தொடர்பாக, உக்ரைனில் இருந்து திரும்பிய எம்.பி.பி.எஸ். மாணவர்கள், வெளிநாட்டு மருத்துவப் பட்டதாரி தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால், இந்தியாவில் கட்டாயமாக 12 மாத இன்டர்ன்ஷிப்பை முடிக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 12,000 ஆக குறைந்துள்ளது.
தேசிய மருத்துவ ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, நீட் தேர்வில் மட்டும் தகுதி பெறும் மாணவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறலாம் என தெரிகிறது. உக்ரைனில் இருந்து திரும்பிய எம்.பி.பி.எஸ். மாணவர்கள் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு இது தடையாக உள்ளது.
எனவே இந்த விஷயத்தில் தாங்கள் உடனடியாக தலையிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். உக்ரைனில் இருந்து திரும்பிய எம்.பி.பி.எஸ். மாணவர்கள் இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் தங்களின் படிப்பைத் தொடர உதவும் வகையில், ஒரு சிறப்பு நிகழ்வாக இது தொடர்புடைய வழிகாட்டுதல்களை தளர்த்த தேசிய மருத்துவ ஆணையத்திற்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.