தமிழகம்

உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்?

சென்னை,

யாருடைய அழுத்தத்தால் உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று தி.மு.க. அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்த பலர் தங்கள் உயிரை மாய்த்து வந்தனர். இதையடுத்து ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கப்படும் என்றும், இதற்காக சட்ட மசோதா நிறைவேற்றப்படும் என்றும் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந்தேதி அப்போதைய முதலமைச்சராக இருந்த எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். இதற்கு அப்போது அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து ஆன்லைன் ரம்பி போன்ற இணைய வழி சூதாட்ட விளையாட்டுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு அப்போது தமிழக ஆளுராக இருந்த பன்வாரிலால் புரோகித் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் 20-ந்தேதி அன்று அந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார். அதன்படி ஆன்லைன் விளையாட்டுக்கு தடை சட்டம் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் 2021 சட்டமன்ற தேர்தலுக்கு பின் ஆட்சிக்கு வந்த தி.மு.க. ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆன்லைன் விளையாட்டில் ஈடுபட்டு பணத்தை இழந்த பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இந்த ஆன் லைன் விளையாட்டை தடை செய்வது தொடர்பாக கடந்த 23.3,2022 அன்று தமிழக சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் மணலி புதுநகர் பகுதியில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு பணம் இழந்ததால் பவானி (வயது 29) என்ற இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஒரு இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள நிலையில், தமிழகம் முழுவதும் அனைத்து பத்திரிகையிலும் நேற்று முழு முதற்பக்க ஆன்லைன் ரம்மி விளம்பரம் வருகிறது.

காவல்துறை டிஜிபி.யே ஆன்லைன் ரம்மி அல்ல அது ஆன்லைன் மோசடி, உங்கள் உயிரை கொல்லலாம், என வெளிப்படையாக எச்சரிக்கும் நிலையிலும் கூட, இந்த உயிர்க்கொல்லி ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய நடவடிக்கை எடுக்காதது ஏன்? யாருடைய அழுத்தத்தால் இந்த தயக்கம்? இன்னும் எத்தனை உயிர்களை தெரிந்தே கொல்லப்போகிறது இந்த ஆன்லைன் சூதாட்டம்?

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.