திராவிட மாடல் அல்ல திருட்டு மாடல் ஆட்சி-எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி விளாசல்

ராணிப்பேட்டை
தமிழகத்தில் நடைபெறுவது திராவிட மாடல் ஆட்சி அல்ல. திருட்டு மாடல் ஆட்சி என்று எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி கூறினார்.
விடியா தி.மு.க ஆட்சியில் விவசாயிகளின் விளைந்த நெல்லை கொள்முதல் செய்ய மூட்டைக்கு 70 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை தி.மு.க.வினர் மிரட்டி மாமூல் வசூலிப்பது, விவசாயிகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் மும்முனை மின்சாரம் வழங்காதது,
அறிவிக்கப்படாத மின்வெட்டு, டாஸ்மாக் கடைகளில் தி.மு.க.வினர் மாமூல் வசூலிப்பது, சூதாட்டங்கள், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, கஞ்சா விற்பனை, மோசடி நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசை கண்டித்து ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ தலைமையில் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சி துணை கொறடா சு.ரவி எம்.எல்.ஏ பேசியதாவது:-
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தி.மு.க. தலைவர் ஸ்டாலின் பச்சை துண்டு போட்டுக்கொண்டு விவசாயிகளை ஏமாற்றி வந்தார். தற்போது எங்கே போனது பச்சைத்துண்டு. தன் தந்தையின் மஞ்சள் துண்டு தான் அவர்களுக்கு நினைவிருக்கிறது. விவசாயிகளை ஏமாற்றியது தி.மு.க. விவசாயிகளின் நலன் காப்பது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்,
எடப்பாடி கே.பழனிசாமி தமிழகத்தின் முதல்வராக இருக்கும் போது விவசாய மக்களை காப்பாற்றினார். கழக ஆட்சியில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் 87 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
விவசாயிகள் சுலபமாக நெல் கொள்முதல் செய்து லாபம் அடைந்தார்கள். ஆனால் விடியா தி.மு.க ஆட்சியில் நெல் கொள்முதல் நிலையங்கள் மூடிக்கிடக்கிறது. விவசாயிகள் எல்லாம் கண்ணீர் வடிக்கிறார்கள்.
நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படவில்லை. விவசாயிகள் அலைகழிக்கப்படுகிறார்கள். நெல் கொள்முதல் நிலையங்களில் அதிகாரிகள் இல்லை. தி.மு.க.வினர் தான் உள்ளனர். தற்போது உள்ள அரசு விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல் வியாபாரிகளின் நெல்லை கொள்முதல் செய்து வருகிறது.
தமிழகத்தில் நடைபெற்று வருவது திராவிட மாடல் ஆட்சி அல்ல தி.மு.க.வின் திருட்டு மாடல் ஆட்சி. காய்ச்சல்காரன் கஞ்சிக்கு அலைவது போல் தற்போது திமுகவினர், கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட எண்ணற்ற திட்டங்களை ஓடி, ஓடி திறந்து வருகின்றனர்.
இவ்வாறு ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளரும், எதிர்க்கட்சி துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ. பேசினார்.