தற்போதைய செய்திகள்

மக்களை மதிக்க வேண்டும் என்ற பண்பு தி.மு.க.வினருக்கு கொஞ்சம் கூட கிடையாது -முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

மக்களை மதிக்க வேண்டும் என்ற பண்பு தி.மு.க.வினருக்கு கொஞ்சம் கூட கிடையாது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறினார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் வளாகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் நேற்று ஆஜராகி கையெழுத்திட்டார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-

கள்ள ஓட்டு போட்டவரை பிடித்து கொடுத்ததற்காக தி.மு.க. அரசு என்னை சிறையில் அடைத்தது. ஜனநாயக கடமை செய்த என் மீது பல்வேறு பொய் வழக்குகள் போட்டு சிறையில் 20 நாட்கள் ஆனந்தப்பட்டது இந்த விடியா தி.மு.க. அரசு. என்னை அலைக்கழிய வைப்பதனால் நான் சோர்ந்து விட மாட்டேன். அது அவர்களுக்கு பகல் கனவாகத்தான் போய் முடியும்.

கேள்வி:- இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட வேண்டும் என்றும், ஆன்மீகத்தில் இருந்து கொண்டு திராவிடம் என்று சொல்கிறார்கள் என்றும் மதுரை ஆதீனம் குறிப்பிட்டுள்ளாரே?

பதில்:- ஆதீனத்தின் கருத்தை நாம் உதாசீனப்படுத்த முடியாது. இந்து அறநிலையத்துறை என்பது புனிதமானது. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மா மற்றும் அதற்கு பிறகும் எங்கள் ஆட்சிக் காலத்தில் இந்து அறநிலையத்துறை சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது.

இப்போது அங்கு ஒரு பில்டப் நடக்கிறதே தவிர வேறு ஒன்றும் இல்லை. விளம்பர அரசியல் நடக்கிறதே தவிர ஆக்கப்பூர்வமான எந்த ஒரு விஷயமும் அறநிலையத்துறையில் நடக்கவில்லை. இதனை மீட்டு விட்டோம்.

அதனை மீட்டு விட்டோம் என்று பத்திரிகையில் செய்தி வருவதை தான் சம்பந்தப்பட்ட அமைச்சரும், அரசும் செய்து வருகிறதே தவிர உண்மையில் இந்து அறநிலையத்துறை மீது ஆதீனமே குறை சொல்கின்ற அளவுக்கு இருக்கிறது. இந்த அரசு சிந்தித்து செயலாற்றவேண்டிய தருணம்.

ஆனால் நிச்சயமாக இதனை எல்லாம் உதாசினப்படுத்தி விட்டு அந்த அமைச்சர் அனைவரையும் மனம் குளிரும்படி செய்வோம் என்று சொல்வார்.

கேள்வி:- அரசியல்வாதியின் கொள்ளை கூடாரமாக திருக்கோயில்கள் மாறியுள்ளது என்று மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளாரே?

பதில்:- அரசியல்வாதி என்றால் இப்போது ஆளும் கட்சிதானே? ஆளும் கட்சிதான் கொள்ளை கூடாரம். கருணாநிதி கோயில் வேண்டாம் என்று சொல்லவில்லை.

ஆனால் கொடியவர்களின் கூடாரமாக ஆகக்கூடாது என்று பராசக்தியில்வசனம் எழுதியுள்ளார். அந்த வசனம் இப்போது இதற்கு பொருந்துகிறது. இதனைத்தான் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த வசனத்தை உண்மையாக்கும் பணியை இன்றைக்கு தி.மு.க. செய்து வருகிறது.

கேள்வி:- அதிமுக கொடியை நான் பயன்படுத்தக்கூடாது என்று சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று சசிகலா தெரிவித்துள்ளாரே?

பதில்:- வடிவேல் படத்தில் ஒரு டயலாக் வரும். திரும்ப திரும்ப பேசர. திரும்ப திரும்ப பேசர என்று ஒரு வசனம் வரும். எங்களுக்கும் சொல்லி, சொல்லி புளித்து போய்விட்டது. அவர்களும் இதனை ஓயாமல் சொல்லி வருகிறார்.

தேர்தல் ஆணையம், டெல்லி உயர்நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்றார். உச்சநீதிமன்றமும் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. தற்போது சிட்டி சிவில் கோர்்ட்டுக்கு சென்றார். அங்கேயும் நாங்கள் தான் கட்சி என்று தீர்ப்பு வழங்கி விட்டார்கள்.

அ.ம.மு.க.விலிருந்து அனைவரும் இங்கு வந்து கொண்டிருக் கிறார்கள். இன்னும் 4 பேர் அங்கு உள்ளார்கள். அவர்களும் விரைவில் வந்து விடுவார்கள். கட்சியே அங்கு இருக்காது.

தொண்டர்கள் இல்லாமல், மக்கள் ஆதரவு இல்லாமல், சசிகலாவை பொறுத்தவரையில் பணத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று நினைக்கிறார். அந்த குடும்பத்தை தவிர அனைவரும் இங்கு வந்து விடுவார்கள். சசிகலாவை கழகத்தில் சேர்க்கும் என்ற பேச்சுக்கே இடமில்லை. சசிகலாவை எந்த நிலையிலும் கழகத்தில் சேர்ந்து கொள்ளக்கூடாது என்பது தான் எங்களின் நிலைபாடு.

கேள்வி:- ஸ்ரீபெரும்புதூர் அருகே புகார் அளிக்க வந்த பொதுமக்களை அடிக்க அமைச்சர் தா.மோ.அன்பரன் கை ஒங்கிருக்கிறாரே?

பதில்:- தி.மு.க. அமைச்சர்களை பொறுத்தவரையில் பொதுமக்களின் எண்ணங்களை உதாசீனப்படுத்தி அவமதிப்பு செய்வதுதான் அவர்களின் வேலை. மக்களை மதிக்க வேண்டும் என்ற பண்பு அவர்களுக்கு கொஞ்சம்கூட கிடையாது. எங்கள் ஆட்சியில் புரட்சித்தலைவர் காலத்திலிருந்து காவல்துறையில் எந்த தலையீடும் இருக்காது.

காவல்துறை தன்னுடைய கடமையை சுதந்திரமாக செய்யும். என் மீது அரசியல் அழுத்தம் காரணமாகத்தான் நில அபகரிப்பு வழக்கு போட்டுள்ளார்கள். கழகத்தினர் சென்னையில் ஒரு நாளைக்கு 20 கொலை நடக்கிறது என்று சொல்லும்போது, காவல்துறை ஆணையர் 10 கொலை என்கிறார்.

10 கொலையும் கொலையாக தெரியவில்லை போலிருக்கிறது. தமிழகம் போதை மாநிலம். போதையில் தள்ளாடி கொண்டிருக்கின்றது. 16 வயது சிறுமியிடம் 6 முறை சினை முட்டையை எடுத்துள்ளார்கள். மருத்துவத் துறையில் இப்படி ஒரு சம்பவம் நடக்கிறது.

எந்த பத்திரிகையும் வெளிப்படுத்த வில்லையே. அமைச்சர் இதற்கு வாய் மூடியிருக்கிறார். விசாரித்த வகையில் தற்போது இருக்கும் ஈரோடு அமைச்சரின் உறவினருக்கு சொந்தமான மருத்துவமனை என்று தெரிய வந்துள்ளது.

அந்த அமைச்சரை வைத்தே 1 கோடி ரூபாய் முதலமைச்சர் நிவாரண நிதியாக அளித்துள்ளார்கள். ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளார்கள் என்றால் எவ்வளவு தவறுகளை அவர்கள் செய்வார்கள்.

ஆனால் இதுவரையில் அந்த மருத்துவமனை உரிமையாளர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை.அதுபோல கீழ்பாக்கத்தில் தவறான அறுவை சிகிச்சையால் ஒரு பெண் இறந்துள்ளார். இது சுகாதாரத்துறை அமைச்சர் கண்ணுக்கு தெரியவில்லையா? இதுபோன்ற சமூக சீர்கேடுகளை தவிர்த்த எந்த நடவடிக்கையும் எடுப்பது கிடையாது.

கேள்வி:- சென்னையில் சொகுசு கப்பல் அறிமுகப்படுத்தி யுள்ளார்களே?

பதில்:- ஸ்டாலின் தான் சொகுசாக இருக்கிறார். அவர் தான் பயணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார் கூறினார்.