தற்போதைய செய்திகள்

புதுவை அரசு நிர்வாகத்தில் ஸ்டாலின் தலையிடுகிறார்-கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் குற்றச்சாட்டு

புதுச்சேரி

புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலையிடுகிறார் என்று கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்சினைகளில் கவனம் செலுத்தாமல் கடல் வழி மார்க்கமாக ஒரு கார்ப்பரேட் கம்பெனியின் சுற்றுலா கப்பல் போக்குவரத்தை துவக்கி வைத்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் மூலம் பாதிக்கப்படும் தமிழக மக்கள் நலன் கருதி கழக இணை ஒருங்கிணைப்பளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கழக ஆட்சியின் போது தடை செய்ய உரிய நடவடிக்கை எடுத்தார்கள்.

ஆனால் தற்போது தி.மு.க ஆட்சியில் சொகுசு கப்பலில் சூதாட்டம் நடைபெறும் கார்டிலியர் குரூஸ் என்ற கப்பலை முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். இந்த கப்பல் புதுச்சேரியில் நிற்கும் என்ற கருத்தையும் கூறியுள்ளார்.

தமிழக முதலமைச்சர் ஸ்டாலினின் பேச்சுக்கு பிறகு கப்பல் சம்பந்தமான பல்வேறு கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த கப்பல் உண்மையில் புதுச்சேரி கடலில் நிற்பதற்கு புதுச்சேரி அரசு இதுவரை அனுமதி வழங்கியுள்ளதா? அப்படி அனுமதி வழங்கியிருந்தால் அந்த கப்பல் நிற்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா? அப்படி இருந்தால் அதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனை தெளிவுபடுத்த வேண்டியது மாநில சுற்றுலாத்துறை அமைச்சரின் கடமை. சூதாட்டம் விளையாடும் கப்பலாக இருந்தால் மாநில முதலமைச்சர் இதற்கு அனுமதி வழங்கக்கூடாது. வெறும் சுற்றுலா கப்பலாக இருந்தால் அனுமதிக்கலாம்.

சூதாட்டம் நடைபெறும் கப்பலாக இருந்தால் அந்த கப்பலில் இருந்து சிறு படகு மூலம் பயணிகளை இறக்கி வருவதும் புதுச்சேரியில் இருந்து சிறு படகு மூலம் அந்த கப்பலுக்கு செல்லவும் அரசு அனுமதி அளிக்கக்கூடாது.

மத்திய அரசு இதுவரை புதுச்சேரி அரசிடம் அனுமதி கேட்கவில்லை. 15 நாட்டிக்கல்லுக்கு அப்பால் கடலில் கப்பலை நிறுத்த மாநில அரசின் அனுமதி தேவையில்லை. ஆனால் 15 நாட்டிக்கல் மைல் தூரத்திற்குள் கப்பலை நிறுத்த மாநில அரசின் அனுமதி தேவை. மத்திய அரசு இதுவரை புதுச்சேரி அரசிடம் சுற்றுலா கப்பலை நிறுத்த அனுமதி கேட்கவில்லை.

மாநில அரசும் சுற்றுலா கப்பலை நிறுத்த இதுவரை அனுமதி வழங்கவில்லை என துணை நிலை ஆளுநரும் அறிவித்துள்ளார். ஆனால் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுலா கப்பல் புதுச்சேரியில் நிற்கும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார். புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் எந்த அடிப்படையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலையிடுகிறார் என தெரியவில்லை.

இவ்வாறு புதுச்சேரி கிழக்கு மாநில கழக செயலாளர் அன்பழகன் கூறினார்.

பேட்டியின் போது மாநில கழக இணை செயலாளர் திருநாவுக்கரசு, புதுச்சேரி நகர கழக செயலாளர் அன்பழக உடையார் ஆகியோர் உடனிருந்தனர்.