சிறப்பு செய்திகள்

சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பு வந்தாலும் தடுத்து நிறுத்துகிற சக்தியாக கழக அரசு செயல்படும் – சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உறுதி

சென்னை

சிறுபான்மையின மக்களுக்கு எந்தவொரு பாதிப்பு வந்தாலும் அதை தடுத்து நிறுத்துகிற சக்தியாக கழக அரசு செயல்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்தார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்  சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய வினாவிற்கு அளித்த விளக்கம் வருமாறு:- 

ஒரு சட்டத்தைப் பற்றி சில ஐயப்பாடுகளை எதிர்க்கட்சித் தலைவர் சொல்லியிருக்கிறார். அந்த ஐயப்பாட்டின் அடிப்படையில் முதலமைச்சர், நான், உள்பட இந்தச் சட்டமன்றத்தில் விளக்கம் தெரிவித்திருக்கிறோம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட ஓர் இயக்கம். எங்களுடைய இயக்கம் அனைத்து சமுதாய மக்களையும் ஒரே சமநிலையில் பாவிக்கக்கூடிய வகையில், கடந்த 40, 45 ஆண்டுகளாக அந்தப் பண்பாட்டைத்தான் நாங்கள் நடைமுறையில் கடைப்பிடித்து வருகிறோம்.

ஆக எந்தவொரு சமுதாயமும், இஸ்லாமிய சமுதாயம் உள்பட, கிறித்தவ சமுதாயம் உள்பட, சிறுபான்மையினப் பெருமக்கள் சார்ந்திருக்கின்ற எந்தச் சமுதாயத்திற்கும், எந்தவொரு தீங்கு ஏற்பட்டாலும், அதனைத் தடுத்து நிறுத்துகின்ற ஆட்சியாகத்தான், இயக்கமாகத் தான், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கும் என்பதை நாங்கள் ஏற்கெனவே சட்டமன்றத்தில் தெளிவாகத் தெரிவித்திருக்கிறோம்.

எந்தப் பாதிப்பும் எந்தப் பகுதியிலும் இல்லை. வருவதற்கு முன்பாகவே, நாமே பேசிக்கொண்டிருந்தால், அது சரியாக இருக்காது. ஆகவே, யாரும் எந்தவொரு அச்சமும் படத் தேவையில்லை. யாரும் அச்சப்படவே தேவையில்லை. சிறுபான்மையின மக்களுக்கு எந்தவொரு பாதிப்பு வந்தாலும், அதைத் தடுத்து நிறுத்துகிற சக்தியாகத்தான் இந்த அரசு செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளித்தார்.