சிறப்பு செய்திகள்

கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன் தனியார் மருத்துவமனையில் அனுமதி-ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்

சென்னை

உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

கழக அவைத்தலைவரும், முன்னாள் அமைச்சருமான இ.மதுசூதனன் (வயது 81) கடந்த சில மாதங்களுக்கு முன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனது மனைவியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே கொரோனா வைரஸ் தொற்றால் மூச்சுதிணறல் ஏற்பட்டு அவரது மனைவி ஜீவா கடந்த ஏப்ரல் மாதம் 19-ந்தேதி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதன்பின்னர் மருத்துவ சிகிச்சை முடிந்து கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன் தண்டையார்பேட்டை கோதண்டராமன் தெருவில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார். இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் நேற்றுமுன்தினம் மாலை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி தகவலறிந்ததும் கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை மருத்துவமனைக்கு நேரில் சென்று மதுசூதனனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். நேற்று காலை கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி மருத்துவமனைக்கு நேரில் சென்று கழக அவைத்தலைவர் இ்.மதுசூதனனை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன் பூரண நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று தமிழகம் முழுவதும் கழக தொண்டர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.