தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் மன்னராட்சிக்கு மக்கள் முடிவு கட்டுவார்கள்-சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் உறுதி

சேலம்,

தி.மு.க.வின் மன்னராட்சிக்கு மக்கள் விரைவில் முடிவு கட்டுவார்கள் என்று சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் ஆர்.இளங்கோவன் கூறினார்.

சேலம் புறநகர் மாவட்டம், கெங்கவல்லி, ஏற்காடு தொகுதிகளுக்குட்பட்ட அயோத்தியாபட்டினம் தெற்கு, அயோத்தியாபட்டினம் வடக்கு, ஏற்காடு, தலைவாசல் தெற்கு ஒன்றியங்களில் கழக அமைப்பு தேர்தலில் வெற்றி பெற்ற கிளை கழக நிர்வாகிகள், வார்டு நிர்வாகிகளை சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவருமான ஆர்.இளங்கோவன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவிலேயே மிகப்பெரிய ஜனநாயக இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆகும். இந்த ஒரு வருட தி.மு.க. ஆட்சி என்பது மக்களுக்கு வேதனைமிக்க ஆட்சியாக உள்ளது. தமிழகத்தில் விரைவில் கழக ஆட்சி வரும் என்று தி.மு.க.வினரே கூறும் நிலை வந்துவிட்டது,

அந்த அளவிற்கு மக்களுக்கு தி.மு.க. அரசின் மீது அதிருப்தி உள்ளது. அதனால் இங்குள்ள நிர்வாகிகள் கழக அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். தி.மு.க.வின் மக்கள் விரோத செயல்களை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

மன்னராட்சி போல இன்றைய தி.மு.க. ஆட்சி உள்ளது. இதற்கு மக்கள் முடிவு கட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை, இனி எந்த தேர்தல் வந்தாலும் தி.மு.க. வெற்றி பெற முடியாது. எனவே நாம் அனைவரும் ஒற்றுமையோடு பணியாற்றி மீண்டும் முதல்வராக எடப்பாடியாரை கொண்டு வர அயராது பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.