2026-ல் கழகம் மீண்டும் ஆட்சியை பிடிக்கும்-முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ உறுதி

மதுரை
2026-ல் கழகம் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.
மதுரை மாநகர் 79-வது வார்டு தி.மு.க. பகுதி பொறுப்புக் குழு உறுப்பினர் முருகன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் அண்ணாதுரை மாவட்ட துணை செயலாளர் வில்லாபுரம் ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட கழக பொருளாளர், பா.குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
ஆளுங்கட்சியாக இருக்கும்போது கூட்டம் கூடுவது பெரிதல்ல. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மக்கள் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. நீண்ட நாள் இந்த ஆட்சி நீடிக்காது. மக்களுக்கு துரோகம் செய்கிற ஆட்சி தான் இந்த ஆட்சி.
மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காற்றில் பறக்க விட்டுவிட்டு செய்வதறியாது உள்ளார்கள். ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் எந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என்று கூட தெரியாமல் அனைத்து நிகழ்வுகளுக்கும் சென்று தன்னை விளம்பரப்படுத்தி வருகிறார்.
2024 அல்லது 2026-ல் தேர்தல் வரும். நிச்சயம் மீண்டும் நாம்தான் ஆளப் போகிறோம். அரசியல் வரலாற்றில் ஒரு முறைக்கு இருமுறை தி.மு.க. வந்ததே கிடையாது. கழகம் தான் வந்திருக்கிறது. தமிழகத்தில் அதிக நாள் ஆண்ட கட்சி என்றால் அது கழகம் தான். மக்களின் நம்பிக்கையை பெற்ற ஒரு கட்சி என்றால் அது மறைந்த எம்.ஜி.ஆர். உருவாக்கிய கழகம் தான்.
இவ்வாறு அவர் கூறினார்.