தற்போதைய செய்திகள்

காட்டுப்பன்றிகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால் இழப்பீட்டுத் தொகை வழங்க அரசு நடவடிக்கை – சட்டப்பேரவையில் முதலமைச்சர் உறுதி

சென்னை

காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர்சேதத்திற்கு இழப்பீட்டு தொகை வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி உறுதி அளித்தார்.

தமிழக சட்டப்பேரவையில்  வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. உறுப்பினர் தா.மோ.அன்பரசன் பேசினார். இதற்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பதிலளித்து பேசியதாவது:-

உறுப்பினர் பேசுகின்ற போது, அவருடைய ஆட்சிக் காலத்திலே துவங்கப்பட்ட பாலப் பணிகள் நிலுவையில் இருப்பதாக சொன்னார். நிலம் எடுக்கின்ற பிரச்சினையின் காரணமாக தான் நிலுவையில் இருக்கிறது. நீங்கள் சுட்டிக்காட்டுகிறீர்கள். நிலம் எடுப்பது எவ்வளவு பிரச்சினையான ஒன்று என்று உங்களுக்கு நன்றாக தெரியும்.

உடனடியாக நில உரிமையாளர்களிடத்தில் போய் அந்த நிலத்தை எடுத்துக் கொள்ள முடியாது. ஆகவே தான் முதற்கட்டப் பணியை முடித்த பிறகு, பாலம் கட்டும் பணியை துவக்கி இருந்தால் சரியாக இருந்திருக்கும். உங்கள் ஆட்சிக் காலத்திலே முதற்கட்ட பணி நிலம் எடுக்கின்ற பணி, அந்தப் பணியை மேற்கொள்ளாமலேயே பாலம் கட்டும் பணியை துவக்கிய காரணத்தினால் தான் இவ்வளவு கால தாமதம் ஆகிறது. இருந்தாலும் விரைந்து பாலம் கட்டும் பணியை முடிப்பதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.

அதேபோல, ஏரி ஆக்கிரமிப்பு பற்றி சொன்னார். ஏரி ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்றுவதற்கு காலம் பிடிக்கும். உடனடியாக அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்று விடுகிறார்கள். நீதிமன்றத்திற்கு சென்றால் வழக்கு முடியும் வரை காத்திருக்க வேண்டிய ஒரு சூழ்நிலை இருக்கிறது. இப்படிப்பட்ட காரணத்தினால் தான் காலதாமதம் ஆகிறது என்பதை இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன். இவற்றை எல்லாம் நிவர்த்தி செய்து வேகமாக இந்தப் பணிகளை மேற்கொள்ளவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

வனப்பகுதியில் தான் காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதம் செய்வது போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ஆகவே, வனப்பகுதியில் இருக்கின்ற விவசாய குடிமக்கள் தான் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். ஆகவே, காட்டுப்பன்றிகள் பயிர்களை அழிக்கின்ற போது, பயிர்களை காப்பதற்காக வனத்துறை அமைச்சர் குறிப்பிட்டதைப் போல, அங்கே இருக்கின்ற வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

அங்கே இருக்கின்ற விவசாயிகள், வனத்துறை அதிகாரிகளுக்கு காட்டுப்பன்றிகள் குறித்து தெரிவித்தால், வனத்துறை அதிகாரிகள் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்துவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி, அந்த காட்டுப்பன்றிகளால் பயிர்களுக்கு சேதம் ஏற்பட்டால், அதற்குண்டான நிவாரணம் வழங்குவதற்கும் அரசால் நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வளவு பயிர் சேதம் ஏற்பட்டு இருக்கிறது என்று கணக்கிட்டு, பயிர் சேதத்திற்கு உண்டான இழப்பீட்டுத் தொகையை வழங்க அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

நீலகிரி மாவட்ட மக்கள் ஒரு புதிய மருத்துவக் கல்லூரி வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் அங்கே மருத்துவக் கல்லூரி துவக்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து, மத்திய அரசின் அனுமதி பெற்று, அது குறித்து அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மருத்துவக் கல்லூரி வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி உறுப்பினர் சொன்னால் சரியாக இருக்கும். ஏன் என்றால் மலைப்பிரதேசத்தில் இருந்து கீழே வந்து தான் அவர்கள் சிகிச்சை பெற வேண்டிய சூழ்நிலை இருக்கின்றது.

ஆகவே பல்வேறு இடங்களில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தார்கள். நீங்கள் சொன்ன அந்த குறிப்பிட்ட பகுதியில் தான் சில மரங்கள் இருக்கின்றன. அவற்றை வெட்டுவதற்கும் மத்திய அரசிடமிருந்து நாங்கள் அனுமதி கேட்டு இருக்கிறோம். அனுமதி கிடைத்தவுடன் அங்கே கட்டடம் கட்டப்படும். ஒரு மரம் வெட்டப்பட்டால், பத்து மரங்கள் நடப்பட வேண்டும் என்பது விதிமுறை. அதற்கு உட்பட்டு தான் நிலம் எடுக்கின்ற பணி மேற்கொள்ளப்படும் என்பதை உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இது முழுக்க முழுக்க மக்களுடைய நலன் கருதி எடுக்கப்படுகின்ற திட்டம் என்பதையும் உறுப்பினருக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி விளக்கம் அளித்தார்.