தற்போதைய செய்திகள்

வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தான் திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு சாதனை

மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ் ராஜேஷ் கடும் தாக்கு

சென்னை

பெரம்பூர் பகுதியில் புதிய வட்ட கழக அலுவலகத்தை வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், திறந்து வைத்தார். அப்போது

கட்டிங், கமிஷன் வாங்குவதில் தான் தி.மு.க கவனம் செலுத்துகிறது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு சாதனை என்று தி.மு.க.வை வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் கடுமையாக சாடியுள்ளார்.

சென்னை பெரம்பூர் பகுதியில் மக்கள் வழங்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் கொடுங்கையூர் விவேகானந்தர் நகர் பகுதியில் 36-வது (வடக்கு) வட்ட கழக புதிய அலுவலக திறப்பு விழா வட்ட செயலாளர் ஐ.வின்சென்ட் ஜோசப், ஏற்பாட்டில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், வட்ட கழக அலுவலகத்தை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

அப்போது மாவட்ட கழக செயாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், பேசியதாவது:-

மக்கள் விரோத செயல்களில் தான் தி.மு.க. அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. சொத்து வரி உயர்வினால் வாடகை வீட்டில் குடியிருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க. மாடல் ஆட்சியில் மாதம் ரூபாய் 1000 தருவதாகவும், டாஸ்மாக்கை மூடுவதாகவும், மாதம் ஒரு முறை மின்சார கட்டணம் செலுத்தும் நடைமுறை கொண்டு வருவதாகவும், பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர், விலை உயர்வை குறைப்பதாகவும், கூறி பொய் வாக்குறுதிகளை அளித்து ஆட்சியில் அமர்ந்து ஒரு வருடமாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.

கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் ஓராண்டு சாதனை. தி.மு.க. ஆட்சிக்கு மக்களிடம் வரவேற்பில்லை. இதுவரை நிறைவேற்றியதாக கூறப்படும் அனைத்து திட்டங்களும் கடந்த கழக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டவை தான் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். தி.மு.க. மீது தற்போது மக்கள் நம்பிக்கை இழந்து விட்டனர். இனி வருகின்ற தேர்தல் மூலம் அவர்களுக்கு தக்க பாடத்தை புகட்ட தயாராகி விட்டனர்.

பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதியிலும் கழகம் மகத்தான வெற்றி பெறும். அந்த வகையில் வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகத்தினர் சிறப்பாக பணியாற்ற வேண்டும் இப்போதுள்ள தி.மு.க.

வின் மாடல் ஆட்சியில் எம்.எல்.ஏக்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள், மண்டல குழு தலைவர்கள், உள்ளிட்ட பிரதிநிதிகள் அனைவரும் கட்டிங்கிலும், கமிஷனிலும் தான் முழு கவனம் செலுத்துகின்றனர், மக்கள் நலனை சார்ந்த எந்த பணிகளுக்கும் முன்னுரிமை இல்லை.

பேருந்து பயணிகளிடம் சென்று ஸ்டாலின் குறைகளை கேட்டு ஆய்வு செய்து என்ன பயன். மாவட்ட கலெக்டர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வருவாய் துறை அலுவலகத்தில் வாரம் இரு முறை ஆய்வு செய்தால் எத்தனை பைல்கள், தேங்கியுள்ளது என்பதை பார்க்க முடியும்.

அதை விடுத்து பஸ்சிலும், காவல் நிலையத்திலும் முதல்வர் எதற்கு ஆய்வு செய்கிறார். அப்படி செய்வதால் பொதுமக்களுக்கு எந்த பிரயோஜனமும் ஏற்படப்போவது இல்லை. இதெல்லாம் தி.மு.க.வின் மாடல் ஆட்சிக்கு பப்ளிசிட்டி தானே தவிர பயனுள்ள பணிகள் ஏதும் இல்லை.

இவ்வாறு மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் பேசினார்.