மூடிய காருக்குள் சிக்கி 3 சிறுவர்கள் உயிரிழப்பு -குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி முன்னாள் எம்.எல்.ஏ. நிதியுதவி

நெல்லை
பணகுடி அருகே மூடிய காருக்குள் சிக்கி உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பங்களுக்கு ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ ஐ.எஸ்.இன்பதுரை நேரில் ஆறுதல் கூறியதோடு நிதியுதவி வழங்கினார்.
திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே உள்ள லெப்பைகுடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் நிதிஷ், மகள் நிதிஷா இவர்களது உறவினரான சுதன் என்பவரது மகனான கபிஷன் ஆகியோர் சம்பவத்தன்று வீட்டின் எதிரே உள்ள பல நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென காரின் கதவு மூடிக்கொண்டதால் திறக்க முடியாமல் 3 சிறுவர்களும் காரிலேயே மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் லெப்பை குடியிருப்பு கிராமத்திற்கு சென்ற கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினரும், ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஐ.எஸ்.இன்பதுரை, உயிரிழந்த 3 சிறுவர்களின் இல்லங்களுக்கு நேரில் சென்று அவர்களுடைய பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும் அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியும் வழங்கினார்.
இந்நிகழ்வின் போது ஒன்றிய கழக செயலாளர்கள் அழகானந்தம், செல்வராஜ், அந்தோணி அமலராஜா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருண்குமார், மாவட்ட கழக இணை செயலாளர் ஞானபுனிதா, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சந்திரமோகன், வள்ளியூர் பேரூர் துணை செயலாளர் கருப்பசாமி, பணகுடி பேரூர் கழக துணை செயலாளர் ஜெகன், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் தீபக், ரஸ்வின், விவேக், லெப்பை குடியிருப்பு கிளை செயலாளர் செந்தில்குமார் மற்றும் பலர் உடனிருந்தனர்.