தற்போதைய செய்திகள்

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டி – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை

மதுரை தமுக்கம் மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டி இன்று தொடங்குகிறது.

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டி மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று முதல் தொடங்கி மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதனையொட்டி போட்டி நடைபெறும் இடத்தை கூட்டுறவுத்தறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மாநகராட்சி ஆணையாளர் விசாகன், கழக செய்தி தொடர்பாளர் அண்ணாதுரை, மாவட்ட கழக துணை செயலாளர் தங்கம், மாவட்ட பொருளாளர் ஜெ.ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலாளர் சோலைராஜா, முன்னாள் துணை மேயர் திரவியம் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதன் பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான கபடி போட்டி 15-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதில் 37 மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் கபடி அணியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர். கபடி போட்டியில் பங்கேற்க வரும் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் தங்குவதற்கு இடவசதி உள்பட பல்வேறு ஏற்பாடுகளை செய்யப்பட்டு வருகிறது.

முதல் பரிசாக வெற்றி பெறும் அணியினர் ஒவ்வொரு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையாக பெறுவார்கள். அதேபோல் இரண்டாவது பரிசு பெறும் அணியினருக்கு தலா ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். மூன்றாவது பரிசை பெறும் அணியினர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். மேலும் வெற்றி கோப்பைகள் வழங்கப்படும்.

இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகளை அமைச்சர்கள் திண்டுக்கல் சி.சீனிவாசன், கே.ஏ.செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார், டாக்டர் சி.விஜயபாஸ்கர், கே.டி.ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் செ.ராஜூ, வி.எம்.ராஜலட்சுமி, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., சட்டமன்ற உறுப்பினர்கள் நீதிபதி, எஸ்.எஸ்.சரவணன், பெரியபுள்ளான் என்ற செல்வம், கே.மாணிக்கம் ஆகியோர் வழங்குகின்றனர்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.