தற்போதைய செய்திகள்

தமிழ் சமுதாயத்தின் பாதுகாவலராக முதல்வர் எடப்பாடியார் திகழ்கிறார் – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதம்

மதுரை

தமிழர்களின் வீரத்தையும், கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் காத்து ஒட்டுமொத்த தமிழ் சமுதாயத்தின் பாதுகாவலராக முதலமைச்சர் உள்ளார் என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பெருமிதத்துடன் கூறினார்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்தில் நடைபெற்ற மாபெரும் மாட்டு வண்டி பந்தயத்தை வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சரும், கழக அம்மா பேரவை செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதன் பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மாட்டு வண்டி பந்தயம், போன்றவை வீரத்தின் அடையாளம் மட்டுமல்லாது நமது கலாச்சாரமும், பாரம்பரியமும் மிக்கதாகும். நம் கலாச்சாரத்தை உலக மக்களே நேசிக்கின்றனர்.
இதற்கு உதாரணமாக சமீபத்தில் நமது பாரத பிரதமரும், சீன அதிபரும் தமிழகத்திற்கு வந்தபோது நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். மேலும் அவர்களுக்கு பாரம்பரிய உணவு வகைகளும் வழங்கப்பட்டன. அப்போது நமது கலாச்சாரத்தையும், பாரம்பரியத்தையும் சீன அதிபர் வியந்து பாராட்டினார்.

அதேபோல் நமது பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு தடை போட்டது. ஆனால் அரசிடம் வலியுறுத்தி மீண்டும் ஜல்லிக்கட்டை பெற்றுத்தந்தது அம்மாவின் அரசாகும். இதற்காக பாடுபட்டவர் துணை முதலமைச்சர். அதுமட்டுமல்லாது நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளின் துயர் துடைப்பதற்காக காவேரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக முதலமைச்சர் அறிவித்ததோடு மட்டுமல்லாமல் டெல்டா பகுதிகளில் விளைநிலங்களை பாதிக்கும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்று அரசாணை வெளியிட்டு உள்ளார். இதன் மூலம் தமிழகத்தின் பாரம்பரியத்தை காப்பாற்றி தமிழினத்தின் பாதுகாவலராக முதலமைச்சர் திகழ்கிறார். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் உள்ளார். அதனால்தான் ஒட்டுமொத்த விவசாய சங்கங்களும் முதலமைச்சருக்கு காவேரி காப்பாளர் என்ற பட்டத்தை சூட்டி உள்ளனர்.

ஆனால் தமிழினத்திற்கு எதையும் செய்யாமல் நான் தமிழினத்தின் காவலன் என்று தனக்குத் தானே பட்டம் சூட்டிக் கொள்ளும் ஸ்டாலின் காவேரி டெல்டா மாவட்டத்திற்கு சொந்தக்காரர். அவர் இதுபோன்ற திட்டங்களை செய்தது உண்டா? ஐந்து முறை ஆட்சியில் இருந்த திமுக விவசாய மக்களுக்கு எந்த நன்மையும் செய்யவில்லை. மாறாக மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு கையெழுத்திட்டு விவசாயிகளுக்கு தொடர் துரோகத்தை தான் செய்தார்கள்.

முதலமைச்சர் திருவாரூருக்கு சென்றபோது விவசாயிகளுடன் இணைந்து வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு ஒரு விவசாயியாய் வயலில் இறங்கி நடவு நட்டார். இந்த காட்சியை உலக மக்கள் பார்த்து இவர் தான் உண்மையான விவசாய தோழன் என்று புகழாரம் சூட்டி வருகின்றனர். ஆனால் ஸ்டாலினை விவசாய மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் கரும்பு காட்டுக்குள் சிமெண்ட் ரோடு போட்டு ஷூ அணிந்து சென்று இவர் அரங்கேற்றிய போலி நாடகத்தை மக்கள் நேரில் பார்த்து விட்டனர்.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.