தற்போதைய செய்திகள்

தி.மு.க.வின் பி டீமாக சசிகலா செயல்பட்டு வருகிறார் – முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை,

தி.மு.க.வின் பி டீமாக சசிகலா செயல்பட்டு வருகிறார். அவருக்கு ஆதரவாக தி.மு.க. செயல்பட்டு வருகிறது என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.

கழகத்தின் கொடியையும், பொதுச்செயலாளர் என்ற பதவியையும் சசிகலா பயன்படுத்துவதாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தொடர்ந்த வழக்கில் நேற்று விசாரணை நடைபெற்றது. வழக்கு விசாரணைக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் ஆணையத்தில் அவரின் ( சசிகலா) மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதற்கு பிறகு சீராய்வு மனு செய்தார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இப்படி நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டு. இந்தியத் தேர்தல் ஆணையத்தால் மனு நிராகரிக்கப்பட்டு,டெல்லி உயர்நீதிமன்றத்தால் மனு தள்ளுபடி செய்யப்பட்டு, உச்சநீதிமன்றத்தால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் கட்சியினர் மத்தியிலே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும், மோசடியான வேலைகளில் ஈடுபட்டு, அமைதிக்குப் பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற குற்றவியல் எண்ணத்தோடு,

குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்கா சசிகலாவின் செயல் என்பது சட்டத்திற்கு உட்பட்ட செயல் அல்ல.அனைத்து வகையிலும் தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் அவர்களின் மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் கூட சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தன்னை பொதுச்செயலாளராக அறிவிக்க வேண்டும் என்று சொன்ன அந்த மனுவும் நிராகரிக்கப்பட்டது.

இதனை கூட இன்றைக்கு நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கின்றோம். இவர்கள் முழுமையான அளவுக்கு சட்டத்தை மதிக்காமல், ஒரு உள் நோக்கத்தோடு, பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, 17.10.2021 அன்று புரட்சித்தலைவர் நினைவு இல்லத்திற்குச் சென்று அங்குக் கல்வெட்டைத் திறந்து, கொடியை ஏற்றினார். அந்த கல்வெட்டில் தன்னை பொதுச்செயலாளர் என்று போட்டுக் கொண்டார்கள். இது குறித்து காவல் நிலையத்தில் புகார்செய்யப்பட்டது.

வழக்கமாகப் பொதுமக்கள் புகார் அளித்தாலே புகார் பதிவு செய்ய வேண்டும். எங்கள் கட்சியினர் மீது பொய் வழக்கு அளித்தால் காவல்துறை எப்ஐஆர் போடுவார்கள். ஆனால் சசிகலா மீது எப்ஐஆர் போடுவதற்கு இந்த அரசுக்கு விருப்பம் இல்லை. முதலமைச்சருக்கும் விருப்பம் இல்லை. காவல்துறைக்கும் விருப்பம் இல்லை. அவர் மீது எப்ஐஆர் போடவில்லை. அந்த புகார் மனுவில் நாங்கள் தெளிவாக குறிப்பிட்டோம்.

அவரின் செயல் என்பது சட்டத்தை மீறியசெயல். பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு போட வேண்டும் என்ற அடிப்படையிலே குறிப்பிட்டு தெரிவித்தோம். அந்த மனுவை வாங்கிக்கொண்டு மனு பெறப்பட்டதாக ரசீது அளித்தார்கள். ஆனால் எப்ஐஆர் போடவில்லை. 18.12.2021 அந்த தேதியில் காவல் ஆணையரிடம் கடிதம் அளித்தோம். அதில் மாம்பலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். அவர்கள்

சட்டத்தை மதிக்கவில்லை என்று மனு அளித்தோம். அதற்கும் நடவடிக்கை இல்லை. கிணற்றில் போட்ட கல் போல ஆகிவிட்டது. அடுத்து நீதிமன்றத்திற்கு வந்துவிட்டோம்.

நீதிமன்றத்தில் இன்றைக்கு ஒரு மணி நேரத்திற்கு மேல்வாக்கு மூலம் வழங்கியுள்ளோம். பல்வேறு பிரிவுகளை குறிப்பிட்டு, கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் எங்கள் கொடியைப் பயன்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்டுள்ளோம்.

மேற்கொண்டு நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்திய தண்டனை சட்டப்படி அவர்கள் குற்றம்புரிந்தவர்கள் என்பதை நாங்கள் தெளிவாக நீதிமன்றத்தில் கூறியுள்ளோம். வாக்கு மூலத்தை பதிவு செய்துள்ளார்கள்.

இந்த வாக்கு மூலத்தின்அடிப்படையில் நீதிமன்றம் நாங்கள் குறிப்பிட்ட சட்ட பிரிவுகளின் கீழ்நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு முன்னாள் அமைச்சர் டி.ெஜயக்குமார் அளித்த பதிலும் வருமாறு:-

கேள்வி: சசிகலாவிற்கு ஆதரவாக திமுக செயல்படுகிறதா

பதில்: கண்டிப்பாக. யார் புகார் மனு அளித்தாலும் அந்த புகாரில் முகாந்திரம் இருக்கின்றதா என்று காவல்துறை பார்க்க வேண்டும். முகாந்திரம் இருந்தால் எப்ஐஆர் போட வேண்டும். அந்த மனுவில் முகாந்திரம் இருப்பதற்கு நாங்கள் பொதுக்குழுவின் தீர்மானத்தை அளித்துள்ளோம்.

தேர்தல் ஆணையம் எங்களுக்கு அளித்த தீர்ப்பின் நகலை அளித்துள்ளோம். டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் நகலை அளித்துள்ளோம். உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை அளித்துள்ளோம். மறு சீராய்வு தொடர்பான ஆவணத்தை அளித்துள்ளோம்.

இத்தனையும் அளித்தும், இந்த திமுக அரசு சசிகலா மீது எப்ஐஆர் போட்டு நடவடிக்கை எடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைத்ததா என்றால் இல்லை. காரணம் வேடிக்கை பார்க்கின்றது. தி.மு.க.வின் பி டீமாக தான் சசிகலா செயல்பட்டு வருகிறார். 2021-ம் ஆண்டு அளித்த மனு மீது இன்னும் இந்த அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை ஆணையரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுமிகப்பெரிய இயக்கம். இந்த இயக்கத்தின் சட்ட திட்டத்தை எல்லாம் அளித்தும், நீதிமன்ற தீர்ப்பை அளித்தும், இவர்கள் செய்வது முழுக்க முழுக்க சட்ட விரோதம் என்று குறிப்பிட்டும் கூட, எப்ஐஆர் போட்டு நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம் இந்த அரசுக்கு.

காவல் துறைக்கு என்ன தயக்கம். வேறுவழியில்லாமல் நீதிமன்றத்திற்கு வந்துள்ளோம். கண்டிப்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் வந்துள்ளோம். கழகத்தைப் பொறுத்தவரையில் வலிமையாக உள்ளது.