தற்போதைய செய்திகள்

தாலுகா அளவில் நாய்க்கடி மருந்துகள்- பேரவையில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

சென்னை

தாலுக்கா அளவில் நாய்க்கடி மருந்துகள் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று அமைச்சர் டாக்டர்,சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தமிழக சட்டபேரவையில் கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் முன்பெல்லாம் ஊர்களில் 10, 20 நாய்கள் தான் இருக்கும் இப்போது 200க்கும் மேற்பட்ட நாய்கள் சுற்றித் திரிகின்றன. அதில் வெறிநாய் எது, நல்ல நாய் எது என்று தெரியவில்லை. எனவே நாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர், நாய்களுக்கும் குடும்ப கட்டுப்பாடு செய்யப்படுகிறது. அது கால்நடை துறையால் செய்யப்படும். நாய்களின் எண்ணிக்கையை குறைக்க கால்நடை துறை சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நாய்க்கடியால் முன்பு இறப்பு அதிகம் இருந்தது. தற்போது அப்படி இல்லை. முன்பெல்லாம் நாய்கடிக்கு 14 ஊசி போட வேண்டும் என்று அச்சப்படுவார்கள். தற்போது ‘ரேபிஸ்’ எதிர்ப்பு தடுப்பு மருந்துகள் உள்ளன.

தமிழகத்தில் நாய்க்கடியினால் ஏற்படும் இறப்பு இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தாலுகா அளவில் நாய்க்கடி மருந்துகள் இருப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.