தற்போதைய செய்திகள்

10 ஆயிரம் கேங்மேன் பணிகள் ஜனவரி முதல் நிரப்பப்படும் அமைச்சர் பி.தங்கமணி உறுதி

நாமக்கல்

10 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் ஜனவரி மாதத்திலிருந்து நிரப்பப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் நகராட்சி பகுதிகளில் 5-வது வார்டு கம்பன் நகரில் ரூ.12.20 லட்சத்தில் அங்கன்வாடி மையம் அமைக்கும் பணி, 13-வது வார்டு சுந்தரம் காலனியில் ரூ.24.90 லட்சம் மதிப்பீட்டில் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய கட்டடம் கட்டும் பணி, 30-வது வார்டு காளியம்மன் கோவில் தெரு காவிரியாற்று கரையில் படித்துறை கட்டும் பணி, 17-வது வார்டு சிவசக்தி நகர் மற்றும் 2-வது வார்டு ராஜராஜா நகர் பகுதிகளில் ரூ.57.95 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை அமைக்கும் பணி என மொத்தம் ரூ.112.75 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடக்க விழா திருச்செங்கோடு கோட்டாட்சியர் ப.மணிராஜ் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிகளில் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி கலந்து கொண்டு பூமிபூஜை செய்து புதிய திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் குமாரபாளையம் நகராட்சி பகுதியில் வீடு, வீடாக சென்று பொது மக்களிடமிருந்து 500-க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அப்படி பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 25 பயனாளிகளுக்கு முதியோர் மற்றும் விதவை ஓய்வூதியமாக மாதம் ரூ.1000 பெறுவதற்கான ஆணைகளை வழங்கினார்.

இதன் பின்னர் அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழக முதலமைச்சர் ஆணைக்கிணங்க ஒவ்வொரு பகுதிகளிலும் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் மற்றும் வீடு தேடி சென்று மனுக்கள் பெறும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அதன்படி, குமாரபாளையம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மனுக்கள் பெறப்பட்டு வருகின்றன. அடிப்படை வசதிகள், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை ஆய்வு செய்து தகுதி அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கேங்மேன் காலிப் பணியிடங்கள் நிரப்புவது குறித்த வழக்கு நிலுவையில் உள்ளதால், விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்கள் நிரப்பும் விவகாரத்தில், உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு முடிவடைந்தவுடன் 10 ஆயிரம் பேருக்கு கேங்மேன் பணிகள் வழங்கப்படும். அதுதவிர உதவி பொறியாளர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் பணியிடங்கள், கோவிட் தடையினால் நிறுத்தப்பட்டிருந்தது. வருகிற 2021 ஜனவரி மாதத்திலிருந்து இப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.

இந்நிகழ்ச்சிகளில் குமாரபாளையம் நகர கழக செயலாளரும், தமிழ்நாடு நகர கூட்டுறவு வங்கிகளின் இணையத்தின் இயக்குநருமான ஏ.கே.நாகராஜன், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றிய கழக செயலாளரும், அரசு வழக்கறிஞருமான சந்திரசேகர், நகராட்சி ஆணையாளர் சி.ஸ்டான்லி பாபு, நகராட்சி பொறியாளர் சுகுமார் உள்பட பலர் கலத்து கொண்டனர்.