சிறப்பு செய்திகள் மற்றவை

தமிழகத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும்-தி.மு.க. அரசுக்கு, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

சென்னை
கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வழிகாட்டி நெறிமுறைகள் சரியாக கடைபிடிக்கப்படுவதிலலை என்று கூறியுள்ள கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என தி.மு.க. அரசை வலியுறுத்தி உள்ளார்.

கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று நோயின் முதல் அலை, இரண்டாவது அலை, மூன்றாவது அலை ஆகியவை முடிந்து, கடந்த இரண்டு மாதங்களாக அந்த பெயரை மறந்திருந்த நிலையில், கொரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், ஒமைக்ரான் வைரசின் மாறுபட்ட வடிவங்களினாலான வைரசால் தமிழ்நாட்டில் சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வருவதும் மீண்டும் ஒருவித அச்சத்தை மக்கள் மனதில் ஏற்படுத்தியுள்ளது.

1-6-2022 அன்று 3,712 என்றிருந்த கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8-6-2022 அன்று 7,240 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில், 1-6-2022 அன்று 139 என்றிருந்த கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8-6-2022 அன்று 185 ஆக உயர்ந்துள்ளது.

இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மட்டும் 152 நபர்கள் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த மூன்று மாதங்களில் இது மிகவும் அதிகமானது என்றும், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் இதன் தாக்கம் அதிகமாக இருப்பதாகவும், இந்த இரண்டு மாநிலங்களிலிருந்து மட்டும் கடந்த வாரத்தில் கொரோனா தொற்றினால் 60 விழுக்காடு நபர்கள் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மொத்தத்தில் பத்து மாநிலங்களில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன.

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், கடந்த இரண்டு மாதங்களாக உயிரிழப்புகள் ஏதுமில்லை என்றாலும், ஏப்ரல் மாதத்தில் 20-லிருந்து 30-ஆக இருந்த தினசரி கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து தற்போது 185 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில், சென்னை மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஒமைக்ரான் வைரசின் உருமாறிய வடிவங்களான BA4 மற்றும் BA5 வைரஸ்களால் 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,

இந்த 12 நபர்களில் நான்கு பேருக்கு BA4 வகை கொரோனா தொற்றும் மீதமுள்ள எட்டு பேருக்கு BA5 வகை கொரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அது நான்காவது அலை துவங்கியதற்கான அறிகுறி என்றும் பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன.

தமிழ்நாட்டில் மூன்று வாரங்களுக்கு முன்பு நாவலூரில் ஒருவர் BA4 வகை வைரஸினால் பாதிக்கப்பட்ட சூழ்நிலையில் தற்போது மேலும் 12 பேர் பாதிக்கப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும், குறிப்பாக கர்நாடகா, கேரளா, தெலுங்கானா போன்ற அண்டை மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும், உருமாறிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதையும் கருத்தில் கொண்டு,

இதனை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருந்தாலும், அவை சரியாக கடைபிடிக்கப்படுவதில்லை என்பது தான் கள நிலவரம்.

எனவே, கொரோனா தொற்று அதிகரித்து வருவதையும், உருமாறிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை மக்களிடையே எடுத்துரைத்து, இதனை கட்டுப்படுத்தும் வகையில், முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல்,

கைகளை அடிக்கடி கழுவுதல் உள்ளிட்ட வழிகாட்டி நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி, கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பாக வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளார்.