அ.இ.அ.தி.மு.க தான் பிரதான எதிர்க்கட்சி-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சென்னை,
அதிகமான வாக்குகள், அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை நாங்கள் தான் பெற்று உள்ளோம். எனவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் பிரதான எதிர்க்கட்சி என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்த கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- எல்கேஜி இல்லை என்றார்கள். திரும்ப உண்டு என்கிறார்களே.
பதில்:- வசதி படைத்த குடும்பத்திலே பிறந்த குழந்தைகள் எல்லாம் எல்கேஜி, யூகேஜி வகுப்பில் கட்டணம் செலுத்தி படிக்க வைக்கிறார்கள். வசதி இல்லாத ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த குழந்தைகளும் எல்கேஜி, யூகேஜி கல்வி கற்க வேண்டும் என்பதற்காக அம்மாவின் அரசு இந்த திட்டத்தை கொண்டு வந்தது. அம்மாவின் அரசு கொண்டு வந்தது என்பதற்காக இந்த திட்டத்தை முடக்கினார்கள்.
இன்றைக்கு நாட்டு மக்கள் முழுவதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். எதிர்க்கட்சியின் சார்பில் நாங்களும் எதிர்ப்பு தெரிவித்தோம். அதை எல்லாம் உள் வாங்கி, நேற்றைய தினம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த எல்கேஜி, யூகேஜி திட்டத்தை தொடரும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.
கேள்வி:- அ.தி.மு.க.வை மீட்டெடுப்பதில் சசிகலாவுக்கு ஒரு எடப்பாடி போல் எங்களுக்கு ஒரு எடப்பாடி வேண்டும் என்று டி.டிவி.தினகரன் கூறியிருக்கிறாரே.
பதில்: அதை தான் நாங்கள் விட்டுவிட்டோமே. டி.டி.வி தினகரனை விட்டுவிட்டோம். சசிகலாவை விட்டுவிட்டோம். நீங்கள் தான் திருப்பி திருப்பி கேட்டு கொண்டிருக்கிறீர்கள். டி.டி.வி. தினகரன் தனி கட்சி தொடங்கி விட்டார். சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் இடம் பெறவில்லை.
அவர் அ.தி.மு.க.வில் உறுப்பினர் இல்லை. அவருக்கும், அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை. உங்களுக்கு விறுவிறுப்பான, செய்தி கிடைக்க வேண்டும், பத்திரிகை ஊடகத்தில் வர வேண்டும் என்பற்காக கேட்கிறீர்கள். இனிமேல் தயவு செய்து இந்த கேள்வியை கேட்க வேண்டாம்.
நேற்று முன்தினமே நான் தெரிவித்தேன். இன்றைக்கு ஆளும் கட்சி ஒன்று தான் இருக்கிறது. மீதம் எல்லாமே எதிர்க்கட்சி தான். ஆனால் பிரதான எதிர்க்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான். 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலில் தி.மு.க. வாங்கிய வாக்குகளை பாருங்கள்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வாங்கிய வாக்குகளை பாருங்கள். தி.மு.க.வுக்கும், அ.தி.மு.க.வுக்கும் 3 சதவீத வாக்குகள் தான் வித்தியாசம். அதிகமான வாக்குகளை பெற்றதும் நாங்கள் தான் எதிர்க்கட்சி வரிசையில்.
அதேபோல அதிகமான சட்டமன்ற உறுப்பினர்களை வெற்றிபெற்றதும் நாங்கள் தான். ஆக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் பிரதான எதிர்க்கட்சி.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.