தி.மு.க அரசு செயலற்ற அரசு-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடும் தாக்கு

சென்னை
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி: டெல்டா பகுதியில் உரங்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. உரங்கள் விலையும் அதிகரித்து இருக்கிறது. நெல்லுக்கு கொள்முதல் விலையில் 100 ரூபாய் தான் உயர்த்தி இருக்கிறார்கள். அதாவது 5 சதவீதம் தான் உயர்த்தி இருக்கிறார்கள்.
பதில்: இந்த அரசாங்கம் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. குடும்பம் செழிக்க வேண்டும். எந்ததெந்த துறைகளில் வருமானம் வரும் என்று தான் பார்த்து கொண்டிருக்கிறது இந்த ஓராண்டு காலத்தில். மக்களை பற்றியும் சிந்திக்கவில்லை. விவசாயிகளை பற்றியும் சிந்திக்கவில்லை.
அம்மாவுடைய அரசு இருக்கின்ற பொழுது, நான் முதலமைச்சராக இருந்த காலத்திலும் சரி, அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்திலும் சரி, விவசாயிகள் விளைவித்த அந்த நெல் மணிகளை மூட்டை பிடித்து அரசு நெல் கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு வந்தவுடன் 24 மணி நேரத்தில் கொள்முதல் செய்து அதற்குண்டான தொகையை வங்கி கணக்கில் செலுத்தினோம்.
ஆனால் தி.மு.க. அரசாங்கம் அமைந்த பிறகு விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை கொண்டு வந்து திறந்தவெளியில் அடுக்கி வைத்தார்கள். மழையிலேயே நனைந்து நெல்மணிகள் எல்லாம் முளைத்து இன்றைக்கு நஷ்டத்திற்கு ஆளாகி இருக்கிறார்கள் விவசாயிகள்.
முறையாக அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்படுவதில்லை. அப்படி கொள்முதல் செய்த நெல்மணிகளையும் முறையாக பாதுகாத்து வைக்கவில்லை.
லட்சக்கணக்கான மூட்டைகள் மழையில் நனைந்து நெல்மணிகள் எல்லாம் முளைத்து வீணாகி விட்டது. இன்றைக்கு தி.மு.க. அரசாங்கம் ஒரு செயலற்ற அரசாங்கமாக காட்சியளிக்கிறது. இந்த அரசாங்கத்தால் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.