விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளித்த அரசு அம்மா அரசு-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பேட்டி

சென்னை,
டெல்டா பாசன விவசாயிகளின் மனம் குளிர்கின்றபடி சட்ட ரீதியாக, சட்ட பாதுகாப்பு கொடுக்கின்ற விதமாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற ஒரு சட்டத்தை நாங்கள் கொண்டு வந்து அதை நிறைவேற்றினோம்.
விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளித்த அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் கூறி உள்ளார்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று மயிலாடுதுறையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அ.தி.மு.க. ஆட்சியின் போது டெல்டா பாசன விவசாயிகளுக்கு நிறைய நன்மைகளை செய்திருக்கிறோம். எப்போதெல்லாம் புயல், வெள்ளம், மழை வருகின்றதோ அப்போதெல்லாம் வெள்ளத்தால், மழையால், புயலால் இந்த இந்த விவசாயம் பாதிக்கப்படுகிறது.
டெல்டா மாவட்ட விவசாயிகள் நெற்பயிர் தான் அதிகமாக தான் சாகுபடி செய்கிறார்கள். அதெல்லாம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகின்ற போது அதற்கு தேவையான இழப்பீட்டை உடனுக்குடன் கொடுத்த அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம்.
அதேபோல வறட்சி வந்தது. அந்த வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் நிவாரண தொகை அளித்த ஒரே அரசாங்கம், அம்மாவுடைய அரசாங்கம்.
அதேபோல இயற்கை சீற்றத்தினால், வறட்சியினால் விவசாயிகளின் பயிர்கள் சேதமடையும் போது பயிர்காப்பீடு திட்டத்தின் மூலமாக இந்தியாவிலேயே விவசாயிகளுக்கு அதிகமான இழப்பீட்டு தொகையை பெற்றுத்தந்த அரசாங்கம் அம்மாவின் அரசாங்கம்.
அதுபோல அம்மா அவர்கள் இருக்கின்ற போது விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தார்கள் 2016 சட்டமன்ற தேர்தலிலே. அதையும் நாங்கள் செய்து கொடுத்தோம். அதோடு தொடர்ந்து இயற்கை சீற்றத்தால், வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருந்தார்கள்.
அப்படி விவசாயிகள் கூட்டுறவு சங்கங்களில் வாங்கிய கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று அரசினுடைய கவனத்திற்கு விவசாய சங்கத்தின் மூலமாக எங்கள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று அம்மாவுடைய அரசு 12110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்வதற்கான ஆணை பிறப்பித்து, தள்ளுபடி செய்கின்ற முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தோம்.
பாதியளவுக்கு தள்ளுபடி செய்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு இந்த ஆட்சியாளர்கள் செய்தார்கள். ஆக இப்படி பல திட்டங்களை நிறைவேற்றினோம்.
அதுமட்டுமல்ல திராவிட முன்னேற்ற கழக ஆட்சி இருக்கின்ற போது முதன்முதலாக ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கொண்டு வந்தது திராவிட முன்னேற்ற கழக அரசாங்கம். புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டது இப்பொழுது இருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் தான். அதை தடுத்து நிறுத்துவதற்காக சட்டப்போராட்டம் நடத்தியவர் இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.
அந்த வழியிலேயே வந்த அம்மாவுடைய அரசு தங்களுடைய நிலம் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில் இருந்த டெல்டா பாசன விவசாயிகளின் மனம் குளிர்கின்றபடி சட்ட ரீதியாக, சட்ட பாதுகாப்பு கொடுக்கின்ற விதமாக பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற ஒரு சட்டத்தை நாங்கள் கொண்டு வந்து அதை நிறைவேற்றினோம். விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளித்த அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.