கன்னியாகுமரி

நாகர்கோவில்-தாம்பரம் இடையே வாரம் ஒருமுறை இயங்கும் ரயிலை தினசரி இயக்க வேண்டும்

கன்னியாகுமரி

நாகர்கோவில்- தாம்பரத்திற்கு வாரம் ஒருமுறை செல்லும் ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவினை கன்னியாகுமரியில் நடைபெற்ற மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென் மண்டல மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் 75-வது சுதந்திர தின விழா புகைப்பட கண்காட்சி திறப்பு விழா

நிகழ்ச்சியில் பங்கேற்ற மத்திய ரயில்வே இணை அமைச்சர் ராவ் சாகேப் பாட்டீல் தன்வேயிடம், முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான என்.தளவாய்சுந்தரம், நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.காந்தி ஆகியோர் இணைந்து வழங்கினர்.

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

நாகர்கோவில்ரயில் நிலையத்திலிருந்து காலை கோயம்புத்தூருக்கு புறப்பட்டு செல்லும் தினசரி ரயில் தோவாளை, ஆரல்வாய்மொழியில் நின்று செல்ல வேண்டும்.

இதேபோன்று மறுமார்க்கமாக கோவையிலிருந்து காலை புறப்பட்டு நாகர்கோவிலுக்கு வரும் ரயில் ஆரல்வாய்மொழி, தோவாளை ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயிலை நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து, நாகர்கோவில் டவுண் ரயில் நிலையத்திற்கு மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும்.

பொதுமக்கள் மற்றும் பயணிகள் நலன்கருதி நாகர்கோவிலிலிருந்து-தாம்பரத்திற்கு வாரம் ஒருமுறை செல்லும் ரயிலைனை தினசரி ரயிலாக இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்

பொதுமக்கள், பயணிகள் மற்றும் புனித யாத்திரை செல்பவர்களின் வசதிக்காக கன்னியாகுமரியிலிருந்து வேளாங்கண்ணிக்கு புதிய ரயிலை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நாகர்கோவில்-திருநெல்வேலி இரட்டை ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி உள்ளனர்.

மனுவை பெற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் ராவ் சாகேப் பாட்டீல் தன்வே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்தார்.