தூத்துக்குடி மற்றவை

கழகத்தின் மக்கள் பணிகள் தொடரும்-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ சூளுரை

தூத்துக்குடி,

தி.மு.க.வினரின் தடைகளை தகர்த்தெறிந்து விட்டு கழகத்தின் மக்கள் பணி தொடரும் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ சூளுரைத்து உள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாண்டவர்மங்கலம் கிராமம், அன்னை தெரசா நகர் அருகே உள்ள வெற்றிவேல் நகரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சிக்கான மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 10.11 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணியை தொடங்கி வைக்கும் பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பழனிச்சாமி. தலைமை தாங்கினார். மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் அன்புராஜ், அன்னை தெரசா நகர் கிளை செயலாளர் மாரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

அப்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ. பேசுகையில், ஆட்சியில் இல்லை என்ற போதிலும் அ.தி.மு.க.வினர் எதற்கும் அஞ்சாதவர்கள். தி.மு.க.வினரின் சதியை முறியடித்து, தடைகளை தகர்த்தெறிந்து தொகுதி மக்களுக்கான வளர்ச்சி திட்டப்பணிகளை தொடர்ந்து செய்து வருகிறோம். கோவில்பட்டி தொகுதியின் மக்களுக்காக எங்களின் சேவை தொடரும் என்றார்.