தமிழகம்

இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகத்திற்கே வாக்களிக்க மக்கள் தீர்மானித்து விட்டார்கள்-ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டம்

தேனி

மிகப்பெரும் அதிருப்தியை தி.மு.க. பெற்றிருக்கிறது. இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகத்திற்கு தான் வாக்களிக்க வேண்டும் என தமிழக மக்கள் உறுதியாக இருக்கிறார்கள் என்று கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தேனி மாவட்டம், போடிநாயக்கனூரில் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் முன்னிலையில் போடிநாயக்கனூர் மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட சிலமலை ஊராட்சி முன்னாள் தி.மு.க கிளை செயலாளர் பொன்னுச்சாமி, அ.ம.மு.க கிளை செயலாளர் பிச்சைமணி, தே.மு.தி.க முன்னாள் ஒன்றிய பொருளாளர் ஜெயராஜ், தே.மு.தி.க கிளை செயலாளர் ராஜாமணி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்டோர் அக்கட்சிகளிலிருந்து விலகி கழகத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கழக செயலாளர் எஸ்.பி.எம்.சையதுகான் தலைமை தாங்கினார். கழக அமைப்பு செயலாளர் எஸ்.டி.கே.ஜக்கையன் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியின் போது மாற்றுக் கட்சியிலிருந்து விலகி கழகத்தில் இணைந்தவர்களுக்கு கழக வேஷ்டி மற்றும் சேலைகளை வழங்கி கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

கடந்த 10 ஆண்டு கால கழக ஆட்சியில் மக்களுக்கு எந்த திட்டம் தந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று அறிந்து அத்தகைய திட்டங்களை புரட்சித்தலைவி அம்மா அவர்களும், அம்மா அரசும் நடைமுறைப்படுத்தினார். 10 ஆண்டு கால கழக ஆட்சி யாரும் குறை சொல்ல முடியாத சிறப்பான ஆட்சியாக இருந்தது

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை, பிரச்சாரங்களை தமிழகம் முழுவதும் செய்து எதையும் நிறைவேற்ற முடியாத அரசாக தி.மு.க அரசு விளங்கிக்கொண்டிருக்கிறது. தமிழக மக்களிடம் மிகப்பெரிய அதிருப்தியை தி.மு.க பெற்றிருக்கிறது. எந்த திட்டத்தையும் அவர்களால் கொண்டு வர முடியவில்லை. நடைமுறைப்படுத்த முடியவில்லை என்பது தான் இன்றைய நிலையாக இருக்கிறது.

இதை தமிழக மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதனுடைய அடிப்படையில் தான் பல்வேறு இயக்கங்களிலிருந்து தி.மு.க.வை நம்பி வாக்களித்த பெருமக்கள் மனமாற்றமடைந்து மக்களை காப்பாற்றும் இயக்கமாக கழகம் தான் விளங்கி கொண்டிருக்கிறது என்று நம் இயக்கத்தில் இணைந்து வருகின்றனர்.

நம் கழகத்தில் இணைந்தவர்களை ஒன்றிணைத்து கழக நிர்வாகிகள் இயக்கத்தை வழிநடத்திட வேண்டும்.
புரட்சித்தலைவரும், புரட்சித்தலைவியும் எந்த நோக்கத்திற்காக கழகத்தை உருவாக்கி வழி நடத்தினார்களோ அந்த வழியில் நாம் அடிபிறழாமல் சிறப்பாக செயல்பட வேண்டும். இனி எந்த தேர்தல் வந்தாலும் கழகத்திற்கு தான் வாக்களிக்க வேண்டும் என தமிழக மக்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

கழகம் என்றைக்கும் மக்கள் நலப்பணியில் முன்னிலை வகிக்கும் என்று கூறி பல்வேறு இயக்கங்களிலிருந்து விலகி கழகத்தில் இணைந்த அனைவரையும் வருக வருக என வரவேற்று உங்களையெல்லாம் சந்திக்கும் நல்வாய்ப்பினை உருவாக்கி தந்த புரட்சித்தலைவி அம்மா அவர்களுக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவித்து இன்று போல் நீங்கள் என்றும் நலமுடனும், வளமுடனும் கழகத்தோடு இணைந்து சிறப்பாக செயலாற்றிட வேண்டும்.

கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.பார்த்திபன், மாவட்ட துணை செயலாளர் சற்குணம் மற்றும் ஒன்றிய நகர கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.