இத்தனை முதலமைச்சர்கள் இருந்தால் திட்டங்கள் எப்படி நிறைவேறும்-எதிர்க்கட்சி தலைவர் கடும் தாக்கு

தி.மு.க.வில் ஸ்டாலின் மட்டும் முதலமைச்சர் அல்ல, அந்த குடும்பத்தில் மேலும் 3 முதலமைச்சர்கள் உள்ளனர் என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, இத்தனை பேர் முதலமைச்சர்களாக இருந்தால் எப்படி திட்டங்கள் நிறைவேறும் என்றும் தெரிவித்துள்ளார்.
கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் புறநகர் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி, பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நிலவாரப்பட்டி, பனமரத்துப்பட்டி பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் கழக கொடியை ஏற்றி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
நான் கிராமத்தில் பிறந்தவன், ஏழை மக்களோடு வாழ்கிறவன், நானும் அரசாங்கப்பள்ளியில் படித்தவன், ஆகவே ஏழை எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ-மாணவிகள் அரசாங்க பள்ளியில் தான் பெரும்பாலும் படிக்கிறார்கள் மருத்துவராக ஆக முடியாத சூழ்நிலை,
அதற்காகவே அம்மாவுடைய அரசு நான் முதலமைச்சராக இருக்கும் போது உள் ஒதுக்கீடு 7.5% கொண்டு வந்து நிறைவேற்றிய இன்றைய தினம் சேலம் மாவட்டத்தில் மட்டும் 74 பேர் மருத்துவர்கள் ஆகியுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 550 பேர் மருத்துவர்கள் ஆகியுள்ளனர். இப்படிப்பட்ட திட்டத்தை நடைமுறைப்படுத்திய அரசு அம்மாவுடைய அரசு.
சிறப்பான சாலைகள், நல்ல குடிநீர் வசதி, இப்பொழுது கூட வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதி முழுவதும் பாதுகாக்கப்பட்ட காவிரி குடிநீர் கொடுக்க வேண்டும் என்பதற்காக ரூ.650 கோடியில் கூட்டுக்குடிநீர் திட்டத்தை அறிவித்து அதையும் நான்தான் நடைமுறைப்படுத்தினேன்.
அதேபோல் சாலை வசதிகள் தெருவிளக்கு வசதிகள் இப்படி ஏராளமான திட்டங்களை அம்மாவுடைய அரசு செய்தது. ஆனால் இன்றைய ஆட்சியாளர்கள் எதுவுமே கவனிக்கவில்லை. எப்பொழுது உள்ள முதலமைச்சருக்கு ஒன்றுமே தெரியாது. ஆக எதுவுமே தெரியாத ஒரு முதலமைச்சர் ஸ்டாலின் தான். அவருடைய குடும்பம் தான் வாழ வேண்டும்.
அவருடைய குடும்பத்தில் உள்ளவர்கள் தான் பதவிக்கு வர வேண்டும். அவருடைய குடும்பத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தார். அதன் பின்னர் ஸ்டாலின், உதயநிதி, இன்பநிதி எல்லாமே நிதி நிதி நிதி எல்லா பெயருமே நிதியிலே வைத்துள்ளனர்.
நிதி தான் கண்ணுக்கு தெரிகிறது, மக்கள் கண்ணுக்கு தெரியவில்லை. ஆக அவருடைய வாரிசு அரசியல் முதலமைச்சராக அவருடைய தாத்தா இருந்தார். தற்போது பேரன் வருவதற்கு துடிக்கிறார். ஸ்டாலின் தன்னுடைய மகனை கொண்டு வருவதற்கு ஆயத்தமாகி விட்டார்.
ஆனால் கழகத்தை இருக்கின்றவர்கள் இந்திய நாட்டின் பிரஜைகளாக இருந்து தமிழகத்தில் எந்த பதவிக்கும் வரமுடியும் என்ற நிலையில் இருக்கின்ற ஒரே கட்சி கழகம் தான். திமுகவில் நான் இருந்திருந்தால் முதலமைச்சராக இருக்க முடியுமா அல்லது எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருக்க முடியுமா? ஆக கழகத்தில் இருக்கக்கூடியவர்கள் உழைப்பும், விசுவாசம் மிக்கவர்களாகவும் இருப்பவர்களுக்கு நிச்சயமாக உயர்ந்த பதவி கிடைக்கும். அதற்கு நானே உதாரணம்.
இன்றைக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த நான் தமிழக முதலமைச்சராக இருந்து சிறப்பான ஆட்சியை கொடுத்தேன். இன்றைக்கு ஸ்டாலின் முதல்வர் ஆகி ஒரே ஆண்டில் எவ்வளவு மக்கள் எதிர்ப்பை சம்பாதித்து உள்ளார். மக்கள் விரோத ஆட்சி இன்றைக்கு நடைபெற்று கொண்டிருக்கிறது
இந்த ஆட்சியில் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. ஆன்லைன் சூதாட்டத்தால் 23 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர், நிறைய பேர் சொத்தை இழந்து நடு ரோட்டில் வந்து விட்டனர். இன்னும் இந்த அரசு தூங்கிக்கொண்டிருக்கிறது.
அதேபோல் போதைப்பொருள் எங்கு பார்த்தாலும் கஞ்சா விற்பனை தாராளமாக கிடைக்கிறது. இதையெல்லாம் தடுத்து நிறுத்த இந்த அரசாங்கம் தவறிவிட்டது.
திமுக ஆட்சியில் ஸ்டாலின் மட்டும் முதலமைச்சர் அல்ல, அந்த குடும்பத்தில் மேலும் 3 முதலமைச்சர்கள் உள்ளனர். உதயநிதி ஒரு முதலமைச்சராகவும், அவருடைய மருமகன் சபரீசன் ஒரு முதலமைச்சராகவும், அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் முதலமைச்சராகவும் உள்ளனர். இத்தனை முதலமைச்சர்கள் இருந்தால் எப்படி திட்டங்கள் நிறைவேறும்.
ஆக குடும்பம் தான் இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது. ஸ்டாலின் ஆட்சி நடத்தவில்லை, திறமையற்ற முதலமைச்சர் இங்கு ஆண்டு கொண்டிருக்கிறார். ஆகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உங்களுக்காக துவங்கப்பட்ட இயக்கம் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட நசுக்கப்பட்ட மக்கள் ஏற்றம் பெறுவதற்காக பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் துவங்கப்பட்டு, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கண் இமை போல மக்களை காத்து இரு பெரும் தலைவர்கள் வழியிலே அம்மாவுடைய அரசு மக்களுடைய மகத்தான ஆதரவில் வீறுநடை போட்டு கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் அம்மாவுடைய அரசு அமைய மக்கள் ஆதரவு தர வேண்டும்.
இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.