தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் அம்மா ஆட்சி மீண்டும் மலரும்- வி.வி.ராஜன்செல்லப்பா திட்டவட்டம்

மதுரை
இனி நடைபெறவுள்ள தேர்தல்களில் தி.மு.க மிகப்பெரிய தோல்வியை தழுவும். தமிழகத்தில் அம்மா ஆட்சி மீண்டும் மலரும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ கூறி உள்ளார்.

வைகாசி விசாகத்தை முன்னிட்டு கழக ஆட்சி மீண்டும் அமைந்திட வேண்டி திருப்பரங்குன்றத்தில் சிறப்பு பூஜை செய்து 5 ஆயிரம் பேருக்கு அன்னதானத்தை வழங்கிய மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா கூறியதாவது:-

வைகாசி விசாகத்தை முன்னிட்டு திருப்பரங்குன்றத்தில் உள்ள முருக பெருமானுக்கு மீண்டும் அம்மா ஆட்சி மலர வேண்டி விசேஷ பூஜை செய்யப்பட்டது மேலும் கடந்த அம்மா ஆட்சிக்காலத்தில் இந்த திருப்பங்குன்றம் தொகுதிக்கு எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. தற்போது மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் சட்டமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன்.

இந்த ஒரு வருட திமுக ஆட்சியில் மதுரை மாவட்டத்தில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. ஆனால் அம்மா ஆட்சியில் மக்கள் பயன்பெற்று வந்த திட்டங்களை எல்லாம் முடக்கி வைத்து வருகின்றனர்.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் 1292 கோடி ரூபாய் மதிப்பில் குமுளி லோயர் கேம்பில் இருந்து குழாய் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதன் மூலம் மதுரை மாநகரில் 100 வார்டுகள் பயன்பெறும். ஆனால் தற்போது தி.மு.க ஆட்சியில் இந்த திட்டம் மந்த நிலையில் உள்ளது.

குறிப்பாக சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக இருக்கிறது. கஞ்சா போன்ற போதை மருந்துகள் புழக்கம் அதிகரித்து விட்டது. இதனால் தினமும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் தடுக்க தி.மு.க. அரசு தவறி விட்டது என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்-

தி.மு.க.வின் ஓராண்டு ஆட்சி மக்களுக்கு வேதனை ஆட்சியாக இருக்கிறது. அம்மாவின் பத்து ஆண்டு ஆட்சி என்பது மக்களுக்கு பசுமையின் ஆட்சியாக இருந்தது. ஆகவே இனி வருகின்ற தேர்தலில் தி.மு.க மிகப்பெரிய தோல்வியை தழுவும். தமிழகத்தில் அம்மா ஆட்சி மீண்டும் மலரும்.

இவ்வாறு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா கூறினார்.