தற்போதைய செய்திகள்

மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் பச்சைத் துண்டுடன் முதலமைச்சருக்கு கழகத்தினர் உற்சாக வரவேற்பு

மதுரை

மதுரை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் முதலமைச்சருக்கு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தலைமையில் கழகத்தினர் பச்சை துண்டு அணிந்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல்லில் மருத்துவக்கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு கார் மூலம் செல்லும் பொழுது கீழமாத்தூர் பைபாஸ் சாலை அருகே மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ தலைமையில் கழக நிர்வாகிகளும், பொதுமக்களும் பச்சை துண்டு அணிந்து கொண்டு காவிரி காப்பாளர் முதலமைச்சர் வாழ்க என்று விண்ணை முட்டும் அளவில் கோஷத்தை முழக்கமிட்டு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு எழுச்சிமிகு வரவேற்பளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா, கழக செய்தி தொடர்பாளர் அண்ணாதுரை, மாவட்ட கழக பொருளாளர் ஜெ.ராஜா, மாவட்ட துணைச் செயலாளர் தங்கம், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், முன்னாள் துணை மேயர்கள் நவநீதகிருஷ்ணன், திரவியம், கழக மாணவர் அணி இணைச் செயலாளர் குமார், பகுதி கழக செயலாளர்கள் தளபதி மாரியப்பன், அண்ணாநகர் முருகன், ஜெயவேல், கருப்பசாமி, மாவட்ட அணி செயலாளர்கள் சோலை ராஜா, அரவிந்தன், மாணிக்கம், தமிழ்ச்செல்வன், கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா மக்களுக்காக பல்வேறு திட்டங்களை வாரிவாரி வழங்கினார்கள் அந்தத் திட்டங்களை மக்களுக்கு தொடர்ந்து நாங்கள் வழங்கி வருகிறோம். இந்த அரசு விவசாய மக்கள், தொழிலாளர்கள், வியாபாரப் பெருமக்கள் இப்படி அனைத்து தரப்பு மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் அரசாக உள்ளது. ஏழை மக்களுக்கு உயிர் சிகிச்சை கிடைக்க வேண்டுமென்று எய்ம்ஸ் மருத்துவமனையை உருவாக்க வேண்டும் அம்மா நினைத்தார் தற்போது அம்மா மறைந்தாலும் கூட அம்மா எண்ணத்தை நிறைவேற்றும் அரசாக இந்த அரசு உள்ளது.

இது உங்கள் அரசு மக்களின் வழி நடக்கும் அரசு ஆகவே வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் கழக அரசின் சார்பில் போட்டியிடும் கழக வேட்பாளர் களை நீங்கள் வெற்றியடையச் செய்ய வேண்டும் அப்போதுதான் இந்த பகுதிகள்எல்லாம் மென்மேலும் பல்வேறு வளர்ச்சிகளை அடையும் அந்த வாய்ப்பை எங்களுக்கு தாருங்கள். இந்த பரவை பேரூராட்சி அம்மாவின் கோட்டையாகும். இங்கு போட்டியிடும் கழக வேட்பாளரை நீங்கள் அமோகமாக வெற்றிபெற செய்ய வேண்டும். இந்த கொளுத்தும் வெயிலில் எனக்கு வரவேற்பளித்த அனைத்து மக்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.