நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்-சிட்லப்பாக்கம் ச.இராசேந்திரன் பேச்சு

செங்கல்பட்டு
மாதம் 1000 ரூபாய் தருகிறோம் என்று சொன்னார்களே தவிர இதுவரை தரவில்லை. மகளிரை ஏமாற்றியதற்காக வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வினருக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் கூறி உள்ளார்.
செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், பல்லாவரம் தொகுதி, பம்மல் வடக்கு பகுதி 7-வது கிழக்கு மற்றும் மேற்கு வட்ட கழகங்களின் சார்பில் கழக செயல்வீரர் ஆலோசனைக்கூட்டம் பம்மல் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வட்ட கழக அவைத்தலைவர்கள் எஸ்.மூர்த்தி, எல்.புண்ணியகோடி ஆகியோர் தலைமை வகித்தனர். முன்னாள் கவுன்சிலர் தா.முகுந்தன் முன்னிலையில் மேற்கு வட்ட கழக செயலாளர் பி.எஸ்.சுரேஷ் வரவேற்புரையாற்றினார்.
கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். இக்கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ப.தன்சிங், பம்மல் வடக்கு பகுதி கழக செயலாளர் வெ.ஜெகநாதன், பகுதி அவைத்தலைவரும் முன்னாள் கவுன்சிலருமான துரை தண்டபாணி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் பி.ஆர்.எஸ்.சரவணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசியதாவது:-
ஒவ்வொரு கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் வார்த்தை ஜாலம் மூலம் தான் சமூக நீதி பேசுகிறார். ஆனால் பெண்களுக்கு உரிய மரியாதையை தி.மு.க.வினர் கொடுப்பதில்லை.
தாம்பரம் மாநகராட்சியில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சார்ந்த பெண் மேயரை மேடையில் அமர வைப்பதில்லை. அவருக்கு உரிய மரியாதையும் கொடுப்பதில்லை. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தில் மட்டுமே மகளிருக்கு உரிய மரியாதை அளிக்கப்படுகிறது.
இதயதெய்வம் அம்மா அவர்கள் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார். அதோடு திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
ஆனால் தி.மு.க. அரசு மாதந்தோறும் மகளிருக்கு 1000 ரூபாய் தருகிறோம் என்று சொன்னார்களே தவிர இதுவரை தரவில்லை. மகளிரை ஏமாற்றியதற்கான பிரதிபலனை வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் கிடைக்கும். தி.மு.க.வினருக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு ெசங்கல்பட்டு மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் பேசினார்.
கூட்ட முடிவில் கிழக்கு வட்ட கழக செயலாளர் ஆலங்கார் ஆர்.பாஸ்கர் நன்றியுரையாற்றினார். ஏற்பாடுகளை முன்னாள் கவுன்சிலர் தா.முகுந்தன் செய்திருந்தார்.