தற்போதைய செய்திகள்

கல்வி நிறுவனங்கள் வளர்ந்தால் பொருளாதாரமும் வளரும் – அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேச்சு

விருதுநகர்

கல்வி நிறுவனங்கள் வளர்ந்தால் பொருளாதாரமும் வளரும் என்று பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் இந்து நாடார் மேல்நிலைப்பள்ளியில் ஆண்டுவிழா பள்ளியின் மேலாளர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் கணபதி, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சாந்தாமணி ஆகியோர் முன்னிலை வைத்தனர். சிறப்பு அழைப்பாளராக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சந்திரபிரபா எம்.எல்.ஏ, முன்னாள் அமைச்சர் இன்பத்தமிழன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

தமிழகத்தில் ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் முதலமைச்சர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ஏழை, எளிய மக்களின் குழந்தைகள் உயர்கல்வி பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர். விலையில்லா லேப்டாப், சைக்கிள், சீருடைகள், புத்தகப்பை, பஸ் பாஸ், காலணி உட்பட பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர். ஏழை, எளிய மக்களும் உயர்கல்வி படிக்கும் வகையில் உதவித்தொகையும் அதிமுக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம் இன்று அனைத்து மாணவர்களும் உயர் கல்வியை பெற முடிகிறது. கல்வி நிறுவனங்கள் வளர்த்தான் உலகத்திலேயே பொருளாதாரம் வளரும். கிராமங்கள் தோறும் பள்ளியை திறக்க உத்தரவிட்ட பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சியாக தான் பார்க்கப்படுகிறது. தமிழக அரசின் திட்டங்களை மாணவ-மாணவிகள் சரியாக பயன்படுத்தி வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசினார்

இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. எதிர்கோட்டை சுப்பிரமணியன், வத்திராயிருப்பு யூனியன் சேர்மன் சிந்துமுருகன், மாவட்ட ஊராட்சி சேர்மன் வசந்தி மான்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.