தற்போதைய செய்திகள்

தமிழகம் முழுவதும் 330 சிறப்பு வார்டுகள் தயார் – அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

சிவகங்கை

தமிழக அரசு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 330 தனி சிறப்பு வார்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளது என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சிவகங்கை அரசு மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் ரூ.7.50 கோடி மதிப்பிலான புதிய கட்டடங்களை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இந்த விழாவில் கதர் மற்றும் கிராமத்தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயகாந்தன், மாவட்ட கழக செயலாளர் பி.ஆர்.செந்தில்நாதன், மருத்துவக் கல்லூரி முதல்வர் ரத்தினவேல், இளங்கோ மகேஸ்வரன், யசோதாமணி, மருத்துவமனை மருத்துவர்கள் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசியதாவது:-

சிவகங்கை அரசு மருத்துவமனையில் ரூ.7.50 லட்சம் கோடி மதிப்பீட்டிலான விபத்து அவசர சிகிச்சை தாய் வார்டு மற்றும் குழந்தைகள் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவில் தாய் வார்டு தொடக்கத்தின் பயனாக 8.3 சதவீதமாக இருந்த இறப்பு விகிதம் 2.8 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக இன்று தமிழ்நாடு முழுவதும் ரூ.270 கோடி மதிப்பீட்டில் அனைத்து மாவட்டத்திலும் இப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

மருத்துவத்துறையில் 15 ஆண்டுகள் செய்ய வேண்டிய வேலைகளை ஒரே ஆண்டில் 11 மருத்துவ கல்லூரிகளை கொண்டுவந்து ஒரு உலக சாதனையை படைத்துள்ளோம். இந்தியா சுதந்திரம் அடைந்து மருத்துவத்துறையில் 1945 மருத்துவ இடங்களை மற்றும் பெற்று வந்த தமிழகம். இன்று 2650 இடங்களை பெற்றிருக்கும் அற்புதமான நிலை தமிழக மாணவர்களுக்கு வழிகாட்டியுள்ளார் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி.

இன்று தமிழகத்தில் பிறந்த 3500 குழந்தைகள் காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத குழந்தைகளை கண்டறிந்து சுமார் ரூ. 8 லட்சம் மதிப்பிலான அரசு சார்பில் உயர் அறுவை சிகிச்சை மூலம் தமிழகத்தில் அக்குறையே இல்லாமல் போக்கி வருகிறோம். தமிழக அரசு கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் 330 தனி சிறப்பு வார்டுகளை தயார் நிலையில் வைத்துள்ளது.

மேலும் தனியார் மருத்துவமனையிலும் இடங்களை தயார் செய்துள்ளோம். முதலமைச்சர் தலைமையில் ஒரு ஆலோசனை குழு அமைக்கப்பட்டு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் சிறப்பான வழிகாட்டுதலின்படி நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

இவ்வாறு அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகானந்தம், சோழன் பழனிசாமி, மாநில கழக நிர்வாகிகள் பெங்களூர் வீரப்பன், கருணாகரன், ஆசைத்தம்பி, பாம்கோ தலைவர் ஏ.வி.நாகராஜன், துணைத் தலைவர் மெய்யப்பன், நகரச் செயலாளர் ஆனந்தன், சிவகங்கை ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலசந்தர், துணை தலைவர் கேசவன், மாவட்ட முக்கிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.