சொத்துவரியை உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்து அ.இ.அ.தி.மு.க மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது -ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை

சென்னை,
தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை பலமுறை நான் சுட்டிக்காட்டி இருக்கிறேன் என்றும், சொத்துவரியை உயர்த்திய தி.மு.க அரசை கண்டித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மிகப்பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன என்றும் கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பிரதான எதிர்க்கட்சியாக விளங்குவது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் என்று அறிக்கை வாயிலாக சுட்டிக்காட்டியுள்ள கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும்,
முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், தமிழ்நாட்டில் சட்டமன்றத்திற்குள்ளும், வெளியேயும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மக்கள் நலனுக்காக எவ்வாறு சிறப்பாக செயல்பட்டது என்பது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நீட் தேர்வு ரத்து, கல்விக் கடன் ரத்து, நகைக்கடன் முழுவதும் ரத்து. மாதம் ஒரு முறை மின் கட்டணம், மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை, சமையல் எரிவாயு மானியம், நியாய விலைக் கடைகளில் மாதம் ஒரு கிலோ கூடுதல் சர்க்கரை மற்றும் உளுத்தம் பருப்பு, முதியோர் ஓய்வு ஊதியம் 1,500 ரூபாய், பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 4 ரூபாய், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம்,
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம், அரசுத்துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்புதல், புதிதாக இரண்டு இலட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்குதல், 100 நாட்கள் வேலைத்திட்டம் 150 நாட்களாக உயர்த்தி வழங்குதல் போன்ற தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததை சுட்டிக்காட்டி பல அறிக்கைகளை நான் விடுத்திருக்கிறேன்.
இதேபோன்று, பாலியல் பலாத்காரம், பெண்களுக்கு பாதுகாப்பின்மை, அரசு நிர்வாகத்தில் தி.மு.க.வினரின் அராஜகங்கள், காவல் துறையினருக்கே பாதுகாப்பு இல்லாத நிலை, கொலைகள், கொள்ளைகள், காவல்துறை கட்டுப்பாட்டில் உயிரிழப்புகள் ஏற்படுதல்,
பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படும் தொடர் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுதல், சாதி கலவரங்கள், மாணவர்கள் ஆசிரியரை தாக்குவது, விலைவாசி உயர்வு, கட்டுமான பொருட்கள் உயர்வு, விளை பொருட்களுக்கு வியாபாரிகள் மீது ஒரு விழுக்காடு வரி, பஞ்சு விலை ஏற்றத்தால் ஜவுளித்தொழில் பாதிப்பு என பல மக்கள் பிரச்சனைகளை சுட்டிக்காட்டி அவற்றை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு தி.மு.க. அரசை நான் அறிக்கைகள் வாயிலாக வலியுறுத்தி இருக்கிறேன்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட தாலிக்குத்தங்கம், அம்மா மினி கிளினிக்குகள், மகளிர் இரு சக்கர வாகன மானியம் போன்ற திட்டங்களை நிறுத்தி வைத்ததற்கும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டன.
சொத்து வரியை உயர்த்திய தி.மு.க. அரசை கண்டித்தும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.