தற்போதைய செய்திகள்

கோரிக்கைகளை பட்டியலிட்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம்-எதிர்க்கட்சி கொறடா எஸ்.பி.வேலுமணி தலைமையில் கழக எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்

கோவை,

கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் தொகுதி உள்ளிட்ட 10 சட்டமன்ற தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு தேவையான முக்கிய திட்டங்கள் நிறைவேற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி தலைமையில் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

இதில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஊரக மற்றும் நகர் பகுதிகளில் பொதுமக்கள் மிகவும் எதிர்பார்க்கும் கீழ்கண்ட திட்ட பணிகளை நிறைவேற்றுத் தர வேண்டும் என கழக தலைமை நிலைய செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்பி.வேலுமணி அளித்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளதாவது

தமிழக முன்னாள் முதல்வர் எடப்பாடியார் ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்ட அத்திக்கடவு அவிநாசி திட்டம் 2 ஐ செயல்படுத்தவும், அத்திக்கடவு அவினாசி திட்டம் ஒன்றில் விடுபட்ட கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளை இணைத்து திட்டம் நிறைவேற்றப்பட வேண்டும்.

தொண்டாமுத்தூர் ஒன்றியம் போளுவாம்பட்டி ஊராட்சி மற்றும் வெள்ளிமலை பட்டணம் ஊராட்சி பகுதியில் கல்லாறு பாபநாசம் இணைந்து புதிய அணை கட்டப்பட வேண்டும். இதனால் இப்பகுதி முழுவதும் பாசன வசதி மேம்பட்டு நிரந்தரமாக நீராதாரம் பெருகும்.

தொண்டாமுத்தூர் ஒன்றியம் தென்னமநல்லூர் ஊராட்சி சித்திரைச்சாவடி அணையில் இருந்து தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை காலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களிலும் மின்மோட்டார் வைத்து நரசிபுரம் முதல் உலியம்பாளையம் வரை உள்ள 25 குட்டைகளுக்கும் நாதே கவுண்டன்புதூர் முதல் ஆறுமுக கவுண்டனூர் வரை உள்ள 15 குட்டைகளுக்கும் மழை நீரை சேமிக்க திட்டமும் நிறைவேற்றப்பட வேண்டும்.

தொண்டாமுத்தூர் ஒன்றிய பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதியாகும். இங்கு வேளாண்மை தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் முக்கிய கோரிக்கையான வேளாண்மை உற்பத்தி பொருட்களை பாதுகாக்க குளிர் பதன கிடங்கு அமைத்து தர வேண்டும்.

தொகுதியில் உள்ள கோவை குற்றாலம் அருவி சுற்றுலா தளமாக மேம்படுத்தவும், அதற்குண்டான சாலை மற்றும் உட் கட்டமைப்பு வசதிகள் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்க வேண்டும். தொண்டாமுத்தூர் தொகுதியில் கோவை மாநகராட்சி பகுதியான தடாகம் ரோடு லாலி ரோடு சந்திப்பில் ஜிசிடி அருகே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும்.

கோவைப்புதூர் புட்டு விக்கி செல்லும் சாலை உக்கடம் செல்லும் சாலை சந்திப்பு வரை நெடுஞ்சாலை துறை மூலம் அகலப்படுத்தி மேம்படுத்தப்பட வேண்டும். தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் இளைஞர்களின் விளையாட்டு திறனை மேம்படுத்திடும் வகையில் அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப கிரிக்கெட் மைதானம் அமைத்து தர வேண்டும்.
மேலும் தொண்டாமுத்தூர் தொகுதியில் புதிதாக இருபாலர் பயிலும் அரசு தொழில்நுட்பக்கல்லூரி பாலிடெக்னிக் அமைத்து தர வேண்டும்.

கோவைப்புதூர் பகுதியில் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் தற்போது வாடகை கட்டடத்தில் இயங்கி வருகிறது. இப்பகுதியிலேயே இடம் தேர்வு செய்து சொந்த கட்டிடத்திற்கு அலுவலகம் மாற்றப்பட வேண்டும்.

மேலும் எனது சட்டமன்ற தொகுதியை மேம்படுத்தவும் மற்றும் பொதுமக்களின் தேவையான மேற்கண்ட முக்கிய பணிகளை உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம் என்ற புதிய முன்னோடி திட்டத்தின் கீழ் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினரான எனது பரிந்துரையினை ஏற்று நிறைவேற்ற ஆவணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, சூலூர், கோவை வடக்கு, கவுண்டம்பாளையம், மேட்டுப்பாளையம், சிங்காநல்லூர் உள்ளிட்ட தொகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் மனு அளித்தனர்.