தற்போதைய செய்திகள்

இனி வரும் தேர்தல்களில் கழகம் வரலாறு படைக்கும்-முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் நம்பிக்கை

விழுப்புரம்

வாக்குறுதியை நிறைவேற்றாததால் தி.மு.க. மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். எனவே இனி வரும் தேர்தல்களில் கழகம் வெற்றி பெற்று வரலாறு படைக்கும் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் கோலியனூர் ஒன்றிய கழகம் சார்பில் உள்ளாட்சி தேர்தல் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் பேட்டைமுருகன் மற்றும் சுரேஷ்பாபு ஆகியோர் வரவேற்றனர்.

இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கி பேசியதாவது:-

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நாம் தோல்வி அடையவில்லை. வெற்றி வாய்ப்பை இழந்துள்ளோம். எனவே வரும் உள்ளாட்சித் தேர்தலை உற்சாகத்தோடு எதிர்கொண்டு அதிக இடங்களில் கழகம் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும்.

கழகம் தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. இந்திய அரசியலில் 50 ஆண்டுகளை நெருங்குகிற கட்சி. இந்த 50 ஆண்டுகளில் 33 ஆண்டுகள் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சாதனை படைத்துள்ளது.

தேர்தல் வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றாததால் தி.மு.க.வுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர். கழகத்திற்கு ஒரு தோல்விக்கு பிறகு வரும் தேர்தல் எப்பொழுதுமே வெற்றி முகமாகவே இருக்கும். எனவே வரும் தேர்தலில் வெற்றி பெற்று வரலாறு படைப்போம்.

இவ்வாறு விழுப்புரம் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசினார்.

கூட்டத்தில் கழக நிர்வாகிகள் சீத்தா கலியபெருமாள், மனோகரன், விஜயன், சிவா, அருள், ராஜி, பாக்கியராஜ், ரமேஷ், குமரவேல், கிருஷ்ணகுமாரி ஏழுமலை, மஞ்சுளா சசிகுமார், சத்யராஜ், சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.