தற்போதைய செய்திகள்

இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் செய்தது தி.மு.க., பாதுகாத்து வருவது அ.தி.மு.க – டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் பேச்சு

சென்னை

இஸ்லாமிய மக்களுக்கு துரோகம் செய்தது தி.மு.க., என்றென்றும் இஸ்லாமியர்களை பாதுகாத்து வருவது அ.தி.மு.க. அரசு தான் என அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் பேசினார்.

காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், தாம்பரம் பெருநகரக் கழகம் சார்பில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் 72-வது பிறந்த நாள் விழா, தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம், மேற்கு தாம்பரம், சண்முகம் சாலை, பாரதி திடலில் நடைபெற்றது. இதில்
அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர், டாக்டர் அ.தமிழ்மகன் உசேன், கழக மகளிர் அணி செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜிலா சத்தியானந்த், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், பரங்கிமலை ஒன்றியக் கழகச் செயலாளர் என்.சி. கிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் தா.மு. துரைவேல், புலவர் ராஜகோபால் ஆகியோர் பேசினர்.

பின்னர் அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் டாக்டர் அ.தமிழ்மகன் உசேன் பேசியதாவது :-

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் அருளாசிப் பெற்ற தமிழகத்தின் இன்றைய மக்கள் நல ஆட்சி தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் கடந்து பத்தாவது ஆண்டில் வீரநடை போட்டு தன் பயணத்தை தொடங்கி இருக்கிறது. புரட்சித்தலைவி அம்மா இல்லாத இந்த ஆட்சி எத்தனை நாள் இருக்கப் போகிறது என்று ஆரூடம் கணித்துச் சொன்ன எதிர்க்கட்சிகள் கனவு தவிடு பொடியாக்கப்பட்டது. ஆண்டுக்கு ஆண்டு புதிய புதிய அளப்பரிய மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இந்தியாவில் நிகரற்ற முதன்மை மாநிலமாக தமிழகம் உயர்ந்து வரலாறு படைத்துள்ளதை நாடே வாழ்த்துகிறது

இந்த அற்புதமான சாதனைக்கு சொந்தக்காரர்களான புரட்சித்தலைவி அம்மா அவர்களது அரசியல் யுகத்தின் வீரமும், விவேகமும் நிறைந்த பேராளுமை மிக்க முதலமைச்சர் எடப்பாடியார், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ் ஆகியோரின் ஆகிய திறன் வாய்ந்த நிர்வாகத்தால் அம்மா ஆட்சிக்கு ஆதரவாக மக்களின் எழுச்சியைக் கண்டு ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. மக்கள் மத்தியில் ஆட்சிக்கு எதிரான தனது பிரசாரம் எதுவும் எடுபடவில்லையே என்று அடங்கி ஒடுங்கிப் போய் கிடந்த ஸ்டாலின் இன்றைக்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தை பிடித்துக் கொண்டு அதன் மூலமாவது அரசியல் பண்ண முடியாதா? என்று பார்க்கிறார்.

கருணாநிதியால் இஸ்லாமிய இனம் அடைந்து வந்த பல்வேறு துயரங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். அத்தகைய கருணாநிதியின் மகன் ஸ்டாலினும், அவரது கட்சியும் இன்றைக்கு முஸ்லீம்களை பாதுகாக்கப் போகிறோம் என்று போலித்தனமாக குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைப் பிடித்துக் கொண்டு புறப்பட்டிருக்கிறார்கள்.இஸ்லாமியப் பெருமக்களின் நலன்களை காக்கும் இச்சாதனைகளை இன்றைக்கு அம்மா அருளாசி பெற்ற முதலமைச்சர் எடப்பாடியார், துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். ஆகிய தலைவர்கள் மேன்மேலும் விரிவாக்கம் செய்து வரலாறு படைத்து வருகிறார்கள்.

மேலும் “தமிழகத்தில் காலா காலமாக என் சகோதர, சகோதரிகள் என்ற பாச உணர்வோடு வாழ்ந்து வரும் இஸ்லாமிய பெருமக்களுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்பட நான் அனுமதிக்க மாட்டேன். குறிப்பாக அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் எந்த ஒரு முஸ்லீமும் எந்தப் பாதிப்புக்கும் ஆளாக மாட்டார்கள். அதற்காக நான் நூறு சதவிகிதம் உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.

இன்றைய அம்மா அரசும் இந்த எனது அனைத்து நடவடிக்கைக்கும் அரணாக இருந்து இஸ்லாமிய மக்களை பாதுகாப்போடு வாழ வைப்பேன்” என்று முதலமைச்சர் எடப்பாடியார் சட்டப்பேரவையில் பிரகடனப்படுத்தினார். இத்தகைய அற்புதமான அறிவிப்பு மற்றும் நடைமுறைபடுத்தி வரும் செயல்பாடுகளால் இஸ்லாமியப் பெருமக்கள் நிம்மதியடைந்திருக்கிறார்கள். இந்நிலையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டம் இன்னும் நடைமுறைக்கே வராத போது மு.க. ஸ்டாலின் பொய்ப் பிரச்சாரம் செய்து நாட்டில் குழப்பத்தை உருவாக்கி வருகிறார்.

இவ்வாறு தமிழ்மகன் உசேன் பேசினார்.

இக்கூட்டத்திற்கு தாம்பரம் நகரக் கழகச் செயலாளர், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு சங்கத் தலைவர் எம்.கூத்தன், நகர புரட்சித் தலைவி அம்மா பேரவைச் செயலாளர் கோபிநாதன், மாவட்ட பிரதிநிதி, நகர அவைத்தலைவர் சுரேஷ்குமார், பி.கே.பரசுராமன், எம்.வேலு, சாய்கணேஷ், பா.காசிராஜன், அந்தோணி, நகர இணைச் செயலாளர் இ.சுசீலா, துணைச் செயலாளர் சாரதா, நகர சிறுபான்மை நலப்பிரிவுச் செயலாளர் எஸ்.எம்.அனிபா, நகர மகளிர் அணி செயலாளர் லோகநாயகி, நகர அண்ணா தொழிற்சங்கச் செயலாளர் முத்துகுமார், கே.சேகர், நகர மாணவர் அணி செயலாளர் ஏ.எம்.சேகர், தாம்பரம் நகர எம்.ஜி.ஆர். மன்ற இணைச்செயலாளர் மார்க்கெட் எஸ்.காசி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.