சிறப்பு செய்திகள்

நோய்களை கட்டுப்படுத்துவதில் தமிழகம் முன்மாதிரி மாநிலம் – முதலமைச்சர் பெருமிதம்

திண்டுக்கல்

தொற்றும் மற்றும் தொற்றா நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது உட்பட அனைத்திலும் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது. எனது தலைமையிலான அரசு புத்தம் புதிய திட்டங்களை புதுமையான உத்திகளோடு நிறைவேற்றி வருகிறது என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற அரசு மருத்துவக்கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்தார்.

திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஆற்றிய உரை –வருமாறு;-

அம்மா தெய்வத்தை வணங்கி, நமது இயக்கத்திற்கு முதல் வெற்றியை அளித்து, நமது இயக்கத்தின் வளர்ச்சிக்கு வித்திட்டது திண்டுக்கல் மாவட்டம். நமது இயக்கத்திற்கு பெருமை சேர்த்த இந்த மாவட்டத்தில் உள்ள அதியனூத்தூரில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் அமையும் புதிய அரசு மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொள்வதில் நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் தான் 1985ல் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளில் அன்றைய மதுரை மாவட்டத்தில் இருந்து பிரித்து திண்டுக்கல் மாவட்டம் உருவாக்கப்பட்டது. வீரம், தியாகம், வளம், ஈகை நிறைந்த ஒரு வரலாற்று சிறப்புமிக்க மாவட்டம் திண்டுக்கல் மாவட்டம்.

குளிரால் நடுங்கிய மயிலுக்கு தம் பட்டு பீதாம்பரத்தை போர்த்திய கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான பேகன் இந்த மாவட்டத்தில் இருந்தார் என புறநானூறு கூறுவதாலும், சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுப்ரமணிய சிவா, விருப்பாட்சி கோபால் நாயக்கர் போன்ற தியாக சீலர்களைப் பெற்றதாலும், இந்த மண் வள்ளல் தன்மையோடு மட்டுமல்லாமல், வீரமும், தியாகமும் மிகுந்த பூமியாகவும் திகழ்கிறது.

மதுரை நாயக்கர் வம்சத்தின் மன்னரான முத்து கிருஷ்ணப்ப நாயக்கரால் திண்டுக்கல் கோட்டை கட்டப்பட்டது. 900 அடி உயரத்தில் திண்டுக்கல் மலை மீது அமைந்திருக்கும் கோட்டையின் எப்பகுதியில் இருந்து பார்த்தாலும் ஊரே தெரியும். இரட்டைச் சுவர்களுடன் கனரக பீரங்கிகளின் தாக்குதல்களையும் சமாளிக்கும் அளவிற்கு இந்தக் கோட்டை பலம் வாய்ந்தது.

இந்த கோட்டையைக் கைப்பற்ற, விஜயநகர மன்னர்கள், நாயக்கர்கள், மைசூர் மன்னர்கள், ஆங்கிலேயர் என பலர் போரிட்டிருக்கிறார்கள். ஆங்கிலேயர்களிடம் வீரமாகப் போராடிய பிறகு, சிவகங்கை ராணி வீரமங்கை வேலு நாச்சியார், இந்தக் கோட்டையில் எட்டு ஆண்டு தங்கியிருந்தது வரலாறு.அனைத்து மதத்தினரின் வழிபாட்டுத் தலங்கள் இந்த மாவட்டத்தில் அதிகமாக உள்ளன. சமூக நல்லிணக்கத்துடன் அனைத்து மதத்தினரும் சகோதர மனோபாவத்துடன் பழகி வருகின்றனர்.

‘பல பல ரகமாக இருக்கு பூட்டு’ என்று புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் திண்டுக்கல் பூட்டை மனதில் வைத்துத் தான் பாடியிருப்பாரோ என்று எண்ணும் அளவிற்கு பல்வேறு ரகங்களில் உற்பத்தியாகும் பூட்டுகளால் திண்டுக்கல் பெருமை அடைகிறது. இம்மாவட்டத்தில் சுமார் 3,500 சிறு தொழில் கூடங்களும், 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளும் உள்ளன. இத்தகைய பெருமை வாய்ந்த இம்மாவட்டத்தில் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் அதிக அளவில் உள்ளன.

“மக்களின் சேவையே மகேசன் சேவை” என மக்கள் நலப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் அம்மாவின் அரசு, இப்பகுதி மக்களின் கோரிக்கையினை ஏற்று, இந்த மாவட்டத்தில் புதிய அரசு மருத்துவக் கல்லூரி அமைக்க மத்திய அரசின் ஆணையை பெற்றுத் தந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் துவங்கப்பட இருக்கும் புதிய அரசு மருத்துவக் கல்லூரியையும் சேர்த்து 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் ஒரே ஆண்டில் தொடங்கிட மத்திய அரசின் ஆணையைப் பெற்ற ஒரே அரசு அம்மாவின் அரசு தான் என்பதை இங்கே பெருமிதத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த அரசு மருத்துவக் கல்லூரி 2021-22ஆம் கல்வி ஆண்டு முதல் 150 மாணவர் சேர்க்கையுடன் செயல்படத் துவங்கும். இக்கல்லூரி துவங்குவதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள கல்லூரி முதல்வர் மற்றும் சிறப்பு அலுவலரை நியமனம் செய்தும், கட்டடப் பணிகளுக்காக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியும் அம்மாவின் அரசு ஆணையிட்டுள்ளது. இப்பணிகளை விரைந்து முடிக்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

“விசையுறும் பந்தினைப் போல் – உள்ளம்
வேண்டியபடி செலும் உடல் கேட்டேன்”
என்று சொன்னதைச் செய்யும் உடல் வேண்டி
உருகுகிறார் மகாகவி பாரதியார் அவர்கள்.

நோயற்ற வாழ்வாகிய செல்வத்தை பெற்றால் தான் அறிவுச் செல்வம் உட்பட அனைத்துச் செல்வங்களையும் எளிதில் பெற முடியும். அதனால் தான், அம்மாவின் அரசு தமிழ்நாடு மக்களின் உடல் நலன் பேணும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, அதில் வெற்றியும் கண்டிருக்கிறது. மேலும், தாய்-சேய் நலனை பேணிக்காப்பது, தொற்றும் மற்றும் தொற்றா நோய்களைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது உட்பட அனைத்திலும் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாகத் திகழ்கிறது.

தமிழ்நாடு அரசின் பொது சுகாதாரத் துறையின் மூலமாக அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சிகிச்சையின் தரத்தை மேம்படுத்தவும், குறிப்பாக தொற்றா நோய்களின் தடுப்பு மேலாண்மையை வலுப்படுத்தவும், ஏற்றத் தாழ்வின்றி சமமான தாய்-சேய் சுகாதார சேவைகளை வழங்கவும் 2 ஆயிரத்து 857 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு சுகாதார சீரமைப்புத் திட்டத்தை அம்மாவின் அரசு செயல்படுத்தத் துவங்கியுள்ளது. சுகாதாரச் சேவைகள் மேலும் செம்மையடைந்து, அதன் பயன்கள் மக்களைச் சென்றடையும் வகையில், அம்மாவின் அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் ஒரு சிலவற்றை மட்டும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

•டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித் திட்டத்தின் கீழ், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு இரத்த சோகையை போக்கவும், பிறந்த குழந்தைகளின் எடை அளவை உயர்த்தவும், 4,000 ரூபாய் மதிப்புள்ள இரும்புச் சத்து மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய அம்மா தாய் சேய் நல ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

• உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தொடர்ந்து ஐந்தாவது முறையாக சிறந்த மாநிலம் என்ற மத்திய அரசின் விருதினை தமிழ்நாடு பெற்றுள்ளது.

• மூளைச்சாவு அடைந்தவரிடம் இருந்த கைகளை தானமாகப் பெற்று, உங்கள் மாவட்டத்தைச் சார்ந்த நாராயணசாமி என்பவருக்கு பொருத்தி,
நாட்டிலேயே முதல் முறையாக இரு கைகளும் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த அரசு அம்மாவின் அரசு.

• அம்மா ஆரோக்கியத் திட்டம், அம்மா முழுஉடல் பரிசோதனைத் திட்டம், அம்மா குழந்தைகள் நல பெட்டகம், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் போன்ற பல திட்டங்களை அம்மாவின் அரசு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.

புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நூற்றாண்டு விழாவில், இந்த மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நான் அறிவித்த அறிவிப்புகளின்படி,

• வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம், ரெங்கநாதபுரத்தில் புதிய ஆரம்ப சுகாதார நிலையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

• திண்டுக்கல் கஸ்தூரிபாய் மருத்துவமனையில் செவிலியர் பயிற்சி பள்ளிக்கான கூடுதல் கட்டடம் கட்டுப்பட்டுள்ளது.

• அம்மையநாயக்கனூர் சமுதாய சுகாதார நிலையத்தில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

• கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சி.டி.ஸ்கேன் நிறுவப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது.

• பழனி அரசு மருத்துவமனையில் உள்ள ஆய்வகக் கூடத்திற்கு நவீன மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

• ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு டயாலிசிஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இது தவிர, இந்த மாவட்டத்தில் அம்மாவின் அரசு கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்திய, செயல்படுத்தும் திட்டங்களில் ஒரு சிலவற்றை எடுத்துக்கூற விரும்புகிறேன்.

• குடிமராமத்து திட்டத்தின் கீழ், பழனி வட்டம், அ.கலையம்புத்தூர் கிராமம் ஓடையகுளம் மற்றும் அரசு வரத்து வாய்க்கால் புனரமைப்புப் பணிகள், ஆத்தூர் கிராமம், பீல்வெட்டி கண்மாயின் கரையை பலப்படுத்துதல், மதகுகள் சீரமைத்தல் மற்றும் செடி, கொடிகளை அகற்றும் பணிகள் உள்ளிட்ட 59 பணிகள் விவசாய பெருங்குடி மக்களின் முழு ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட்டுள்ளன. இது தவிர, 78 பணிகள் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

• முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்க்கும் திட்டத்தின் கீழ், 11 ஆயிரத்து 656 மனுக்களின் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. இவற்றில் திண்டுக்கல் கிழக்கு, கசவனம்பட்டி ஏ.பரமசிவம் மற்றும் தாமரைப்பாடி மருதாயி உள்ளிட்ட 1,612 நபர்களுக்கு ஓய்வூதியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

• சுமார் 35 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

• 6 லட்சத்து 15 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டுள்ளன.

• 11 ஆயிரத்து 266 விவசாயிகளுக்கு முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், மாதாந்திர உதவித் தொகையாக
தலா 1,000 ரூபாய் வழங்கப்படுகின்றது.

• முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட பிற ஓய்வூதியங்கள் தலா 1,000 ரூபாய் வீதம் சுமார் 35 ஆயிரம் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

• கொடகு ஆற்றின் குறுக்கே ஐயம்பாளையம் மற்றும் அகரத்தில் இரண்டு தடுப்பணைகளும், சந்தானவர்தினி ஆற்றின் குறுக்கே
மூன்று தடுப்பணைகளும் சுமார் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளன.

• மேலும், ஆத்தூர் வட்டம் – சீவல்சரகு, ஒட்டன்சத்திரம் வட்டம் – விருப்பாச்சி, நத்தம் வட்டம் – முளையூர்,
நிலக்கோட்டைவட்டம் – கோனாம்பட்டி, பழனி வட்டம்-மாட்டுமந்தை போன்ற இடங்களிலும் தடுப்பணைகள் கட்டப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் உயர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

• திருமணிமுத்தாறு ஆற்றின் குறுக்கே நத்தம் கிராமத்தில் அஞ்சணக்காரன் குளம் அணைக்கட்டு மறுகட்டுமானம் செய்யப்பட்டுள்ளது.

• திண்டுக்கல் அக்கரைப்பட்டி ரயில்வே நிலையங்களுக்கு இடையில் சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

• திண்டுக்கல்-அனுமந்த நகரில் சுமார் 26 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் மக்களின் பயன்பாட்டிற்கு
கொண்டு வரப்பட்டுள்ளது.

• புளியம்பட்டி-பாலாறு சாலையில் உயர்மட்ட மேம்பாலம் சுமார் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

• வட மதுரை ஒட்டன்சத்திரம் சாலையில் சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம் ஒன்று அமைக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு தரப்பட்டுள்ளது.

• சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நரசிங்கபுரம், ராஜவாய்க்கால் கால்வாய் புனரமைக்கப்பட்டு, விவசாய பெருமக்களின் பயன்பாட்டுக்கு
கொண்டு வரப்பட்டுள்ளது.

• 7.5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நத்தம் வட்டம், ராஜநேரி கால்வாய் புனரமைக்கப்பட்டுள்ளது.

• நத்தம் கூட்டுக் குடிநீர் திட்டத்தின்கீழ் 634 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரத்து 274 ஊரக குடியிருப்புகள் மற்றும் 3 பேரூராட்சிகளில் உள்ள மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

• 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 253 ஊரக குடியிருப்புகள் மற்றும் 2 பேரூராட்சிகள் பயன் பெறும் கீரனூர் கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளன.

• வட மதுரை கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 3 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 20 ஊரக குடியிருப்புகளில் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன.

• வேடசந்தூர் பகுதியில் காவேரி கூட்டுக் குடிநீர் இரண்டாம் கட்ட திட்டத்தின்படி 155 கிராமங்கள் பயன் பெற்று வருகின்றன.

• வேடசந்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வகுப்பறை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.

• பொது மக்களின் வசதிக்காக, திண்டுக்கல் மாநகராட்சிக்கு 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய அலுவலகக் கட்டடம் கட்டித் தரப்பட்டுள்ளது.
• நத்தம் பேருந்து நிலையம், சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்டு, பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

• பழனி ஆண்டவர் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரியில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிர்வாகக் கட்டடம் கட்டித் தரப்பட்டுள்ளது.

• கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தில் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

• அரசின் சேவை மக்களுக்கு விரைந்து கிடைக்க, குஜிலியம்பாறையை தலைமை இடமாகக் கொண்ட புதிய வருவாய் வட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

• திண்டுக்கல் மாநகராட்சிக்கு குடிநீர் மேம்பாட்டுத் திட்டம், சுமார் 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

• ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் 63 ஊரக குடியிருப்புகளும், வேடசந்தூர் ஒன்றியத்தில் 84 ஊரகக் குடியிருப்புகளும், ரெட்டியார்சத்திரம் ஒன்றியத்தில் 38 ஊரக குடியிருப்புகளும் பயன் பெறும் வகையில் புதிய கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் சுமார் 43 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

இது தவிர இன்று நடைபெறும் இந்த விழாவில், பொதுப்பணித் துறையின் சார்பில் 4 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான சந்தானவர்த்தினி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை உட்பட மொத்தம் 14 கோடியே 2 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிவடைந்த 45 பணிகளை நான் துவக்கி வைத்துள்ளேன்.

புதிய மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டியது உட்பட, 340 கோடியே 86 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 5 பணிகளுக்கு நான் இன்று அடிக்கல் நாட்டியுள்ளேன்.

அதேபோல, 25 ஆயிரத்து 213 பயனாளிகளுக்கு சுமார் 63 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை இன்று வழங்க உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

“தமிழ்நாடு ஒவ்வொரு துறையிலும், இந்தியாவிலேயே முதன்மை நிலை பெற வேண்டும். இந்தியாவில் ஒவ்வொரு துறையிலும் தமிழ்நாடு தான் சிறந்து விளங்க வேண்டும் என்பது எனது எண்ணம்! திட்டம்! செயல்பாடு! அந்த இலக்கை நோக்கியே எனது தலைமையிலான அரசு புத்தம் புதிய திட்டங்களை புதுமையான உத்திகளோடு நிறைவேற்றி வருகிறது. இந்த முன்னேற்றப் பயணத்தில் நீங்கள் அனைவரும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே எனது விருப்பம்! இதுவே எனது வேண்டுகோள்!” என்றார் புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.

அம்மா வழியில் செயல்படும் அம்மாவின் அரசும், நீர்நிலைகளின் கொள்ளளவை அதிகரிக்க குடிமராமத்து திட்டம், அணைகள் புனரமைக்கும் திட்டம், விவசாய நிலங்களை செறிவூட்டும் வகையில் இலவச வண்டல் மண் வழங்கும் திட்டம், மக்களின் பங்களிப்புடன் நீர்வள ஆதாரத்தை அதிகரிக்கச் செய்ய புதிய “தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மேலாண்மை இயக்கம்”,

“அறிவினான் ஆகுவது உண்டோ பிறிதின் நோய் தந்நோய்போல் போற்றாக் கடை”அதாவது பிற உயிர்களுக்கு உண்டாகும் துன்பத்தை தம் துன்பம்போல் கருதி நீக்காவிட்டால் அறிவிருந்து என்ன பயன் என்றார் தெய்வப் புலவர் திருவள்ளுவர். இதுபோல் ஒவ்வொருவரும் பணியாற்றினால் தான், ஒரு மருத்துவர் உருவாக மக்களின் வரிப் பணத்திலிருந்து அரசு செலவழிக்கும் தொகை அர்த்தமுள்ளதாக அமையும் என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இந்த விழாவினை நல்ல முறையில் ஏற்பாடு செய்த வருவாய், சுகாதாரம், காவல், பொதுப் பணி, உள்ளாட்சி உள்ளிட்ட அனைத்து துறையினருக்கும், அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.