சிறப்பு செய்திகள்

ஸ்டாலின் தலைமையிலான அரசு, திறமையற்ற அரசு-எதிர்க்கட்சி தலைவர் ஆவேசம்

சேலம்
ஸ்டாலின் சொல்வது அத்தனையும் பச்சை பொய், ஏழை மக்கள், முதியோர், மகளிரை ஏமாற்றிய கட்சி தி.மு.க. என்றும், ஸ்டாலின் தலைமையிலான அரசாங்கம் திறமையற்ற அரசாங்கம் என்பதை நிரூபித்து வருகிறது என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கூறி உள்ளார்.

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி சேலம் புறநகர் மாவட்டம், வீரபாண்டி சட்டமன்ற தொகுதி, பனமரத்துப்பட்டி கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நிலவாரப்பட்டி, பனமரத்துப்பட்டி பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்ட கொடிக்கம்பத்தில் கழக கொடியை ஏற்றி வைத்து பேசியதாவது:-

தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு கால நிறைவு பெற்றுள்ளது. இந்த ஓராண்டு கால தி.மு.க. ஆட்சியிலே நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. விலைவாசி உயர்வு, சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைவு, எங்கு பார்த்தாலும் போதை பொருள் விற்பனை, தினந்தோறும் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி, செயின் பறிப்பு இதுதான் இருந்து வண்ணம் இருக்கிறது. ஸ்டாலின் அரசாங்கம் திறமையற்ற அரசாங்கம் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.

அதே நேரத்தில் 2021 சட்டமன்ற பொதுத்தேர்தலின் போது தி.மு.க.வின் சார்பாக அன்றைய தினம் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அந்த தேர்தல் அறிக்கையிலே தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்பது இதுவரை நடைபெறவில்லை. ஆகவே ஆட்சிக்கு வருவதற்கு முன் மக்களை ஏமாற்றுவதற்காக போடுகின்ற நாடகம்.

கவர்ச்சிகரமான திட்டங்களை மக்களை ஏமாற்றுவதற்காக கொடுத்தனர். ஆட்சிக்கு வந்தவுடன் 5 சவரன் நகை கூட்டுறவு சங்கத்தில் தள்ளுபடி செய்யப்படும் என்று சொன்னார்கள். அதையும் செய்யவில்லை, நாற்பத்தி எட்டு லட்சம் பேர் தங்களுடைய நகைகளை கூட்டுறவு வங்கிகளில் அடமானம் வைத்து செலவு செய்து விட்டார்கள்.

தற்போது என்ன சொல்கிறார் ஸ்டாலின் 50க்கும் மேற்பட்ட விதிகளை வைத்துள்ளார். 50 விதிகளையும் பூர்த்தி செய்தவர்களுக்கு தான் அந்த நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறுகிறார்.

அதுவும் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் சொல்கிறார் பெண்களை பார்த்து இன்னும் நகை அடமானம் வைக்கவில்லையா என்று கூறுகிறார். ஆகவே இவர்களை நம்பி கூட்டுறவு சங்கத்தில் அடமானம் வைத்து பணத்தை பெற்று செலவழித்து இப்பொழுது பல கண்டிஷன்கள் போட்டு சுமார் 13 லட்சம் பேருக்கு தான் நகைக்கடன் தள்ளுபடி என்று சொல்லி விட்டார்.

அடமானம் வைத்தவர்கள் நாற்பத்தி எட்டு லட்சம் பேர், அப்படி என்றால் 35 லட்சம் பேரின் நிலை என்ன, ஆகவே இப்படி மக்களை ஏமாற்றி கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்து வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பிறகு பல்டி அடித்து விட்டனர்.

அதேபோல் 2 கோடியே 15 லட்சம் குடும்பங்களில் உள்ள ஒவ்வொரு குடும்ப தலைவிகளுக்கும் உரிமைத்தொகை மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பேன் என்று சொன்னார்.

மருந்து கடைக்கு வரும் போது ஆனால் தற்போது அந்த உரிமை தொகையும் கிடைக்கவில்லை. மாதம் மாதம் கியாசுக்கு 100 ரூபாய் மானியம் என்று சொன்னார். அதுவும் கொடுக்கவில்லை.

ஏழை, எளிய குடும்பத்தில் இருக்கின்ற உழைக்கும் திறனற்ற முதியோர்களுக்கு புரட்சித்தலைவி அம்மா ரூ.500லிருந்து ரூ.1000 ஆயிரம் ஆக்கினார். திமுக ஆட்சிக்கு வந்தவுடனே ரூ.1000 ரூபாயை ரூ.1500 ஆக உயர்த்துவோம் என்று சொன்னார்கள். அவர்களுக்கும் ஏமாற்றம், முதியவர்களையும் ஏமாற்றிய ஒரே கட்சி திமுக தான். இளைஞர்கள் வங்கிகளில் கல்விக்காக வாங்கிய கடன் தள்ளுபடி என்றார்கள். அதற்கும் வாயே இன்னும் திறக்கவில்லை.

100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாளாக உயர்த்துவோம் என்றார்கள். ஆனால் அந்த ஏழை மக்களையும் ஏமாற்றிய கட்சி திமுக, திமுக தலைவர் ஸ்டாலின், அத்தனையும் பச்சை பொய். திமுகவினர் தேர்தலுக்கு முன்பு ஒரு பேச்சும், தேர்தலுக்கு பெண் ஒரு பேச்சும் பேசிவிட்டு கைவிட்டு விடுவார்கள்.

ஆனால் கழகத்தை பொறுத்தவரைக்கும் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் சரி, அந்த இரு பெரும் தலைவர்களும் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றி தந்தார்கள்.

அதனை தொடர்ந்து அம்மாவுடைய அரசாங்கம் அவர்கள் விட்டுச்சென்ற பணியை தொடர்ந்து செயல்படுத்தி அவர்கள் என்னென்ன திட்டங்களை கொண்டு வந்தார்களோ அதை எல்லாம் நாங்கள் சிந்தாமல் சிதறாமல் நிறைவேற்றப்பட்ட ஒரே அரசாங்கம் அம்மாவுடைய அரசாங்கம்.

ஏழைக குடும்பத்தில் பிறந்த படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் ஒரு பவுன் கொடுத்தோம். 25 ஆயிரம் மற்றும் ஐம்பதாயிரம் ரூபாய் கொடுத்தோம். அதையும் தற்போது திமுக அரசு கைவிட்டு விட்டது.

அம்மா இரு சக்கர வாகனம் வாங்குபவருக்கு இருபத்தைந்தாயிரம் ரூபாய் மானியம் அறிவித்தோம். 3 லட்சம் பேருக்கு கழக ஆட்சியில் கொடுத்தோம். அதையும் அதையும் தி.மு.க அரசு கைவிட்டு விட்டது. மாணவ-மாணவிகளுக்கு அற்புதமான கல்வியை கொடுப்பதற்கு விலையில்லா மடிக்கணினி திட்டத்தை கொண்டு வந்தோம்.

சுமார் 58 லட்சம் மாணவ மாணவிகளுக்கு புரட்சித்தலைவி அம்மா இருக்கும் போதும் சரி, நான் இருக்கும் வரையும் மடிக்கணினி கொடுத்தோம். இன்றைக்கு அதுவும் யாருக்கும் கிடைக்கவில்லை, கொடுப்பார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இப்படி கழக அரசு கொண்டு வந்த அற்புதமான திட்டங்களை நிறுத்தி விட்டனர். இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா இருக்கும் போது விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி கொடுத்தார்கள்.

பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மூணு பத்திரிகைக்கு அனுப்பி விலையில்லா நோட்டு புத்தகம் காலணி, சைக்கிள், மடிக்கணினி எவ்வளவும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் கொடுத்து தொடர்ந்து செயல்படுத்தினோம்.

அதோடு அரசு பள்ளியில் படிக்கின்ற மாணவச் செல்வங்கள் மருத்துவராக வேண்டும் பல் மருத்துவராக வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசாங்கம் நான் முதலமைச்சராக இருந்த பொழுது 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கொண்டு வந்து சட்டம் நிறைவேற்றப்பட்டு இன்றைய தினம் அரசாங்கப் பள்ளியில் படிக்கின்ற மாணவ செல்வங்கள் 550 பேர் மருத்துவக்கல்விக்கு செல்கிறார்கள்.

நம்முடைய சேலம் மாவட்டத்தில் மட்டும் எழுபத்தி நான்கு பேர் இந்த ஆண்டு செல்கிறார்கள். அதுமட்டுமல்ல இந்தப் பல் மருத்துவக்கல்லூரியிலே எம்பிபிஎஸ் சேர்ந்து படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு இந்த உள் ஒதுக்கீடு மூலமாக இடம் கிடைத்து படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு அரசே அந்த செலவு செய்கிறது. ஒரு பைசா செலவில்லாமல் அவர்கள் எம்பிபிஎஸ் ஆக முடியும். அதையும் கழக அரசு தான் கொண்டு வந்தது.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.