தற்போதைய செய்திகள்

ஓட்டல் உரிமையாளருக்கு சரமாரி அடி-உதை: சேலம் தி.மு.க. கவுன்சிலர் மகன் அராஜகம்

சேலம்,

ஆம்லெட் சரியாக வேகவில்லையென கூறி போதையில் அடியாட்களுடன் சேர்ந்து ஓட்டலில் தகராறு செய்த தி.மு.க. கவுன்சிலரின் மகன், ஓட்டல் உரிமையாளரை சரமாரியாக அடித்து உதைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார் சேலம் தி.மு.க. கவுன்சிலரின் மகன். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சேலம் மாவட்டம், தாரமங்கலம் அடுத்த கோனகாப்பாடி ஊராட்சி, அத்திகட்டானூர் பகுதியை சேர்ந்த வேலுச்சாமி மகன் செந்தில்குமார் (வயது 26). இவர் தாரமங்கலத்தில் இருந்து சேலம் செல்லும் சாலையில் கடந்த 6 மாதங்களாக உணவகம் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் தாரமங்கலம் நகராட்சி 6-வது வார்டு தி.மு.க. பெண் கவுன்சிலர் செல்வி என்பவரின் மகன் அரவிந்த் என்பவர் கடந்த திங்கட்கிழமை அன்று செந்தில்குமாரின் உணவகத்தில் சாப்பிட்டு காசு கொடுக்காமல் செல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

ஆனால் கடையின் உரிமையாளர் செந்தில்குமார் கண்டிப்புடன் பேசி சாப்பிட்ட தொகையை பெற்று கொண்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த அரவிந்த் இனி நீ எப்படி கடை நடத்தி விடுவாய் என்று பார்க்கலாம் என்று செந்தில்குமாரை மிரட்டி விட்டு சென்றுள்ளார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு குடிபோதையில் 10 பேர் கொண்ட அடியாட்களுடன் தி.மு.க. கவுன்சிலர் மகன் அரவிந்த், செந்தில்குமாரின் உணவகத்திற்க வந்துள்ளார். அங்கு பரோட்டா, தோசை , முட்டை தோசை என்று அனைத்தையும் ஆர்டர் செய்து சாப்பிட்டு உள்ளார்.

இறுதியாக ஆம்லெட் ஆர்டர் செய்து வரவழைத்துள்ளார். ஆனால் ஆம்வெலட் சரியாக வேகவில்லை என்று கூறி வேண்டுமென்றே வம்பிழுத்து உணவக உரிமையாளர் செந்தில்குமாரை, அரவிந்த் மற்றும் அவருடன் வந்த ரவுடிகள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இதில் செந்தில்குமாருக்கு கண் மற்றும் நுரையீரல் பகுதி படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தாரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் ஒரு வாரம் ஆகியும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இதுகுறித்து தாரமங்கலம் போலீசாரிடம் கேட்ட போது உணவக கடை உரிமையாளரை தாக்கிய விவகாரத்தில் தி.மு.க. பெண் கவுன்சிலர் மகன் அரவிந்த் உட்பட 4 பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.