தற்போதைய செய்திகள்

தி.மு.க. அமைச்சரின் உதவியாளர் மிரட்டல்-தூத்துக்குடி எஸ்.பி.யிடம் கணவன்-மனைவி புகார்

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ள தங்கள் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தவருக்கு ஆதரவாக தி.மு.க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாகரன் செயல்பட்டு தங்களை மிரட்டுவதாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கணவன்-மனைவி புகார் செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மனைவி சாந்தா. இவர் தனக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார் என்று ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்துள்ளார். ஆனால் அந்த புகார் மீது சம்பந்தப்பட்டவர் மீது இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில் பாஸ்கரன், சாந்தா ஆகியோர் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் ஒரு புகார் மனு அளித்துள்ளனர்.

அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

எங்களுக்கு சொந்தமான இடத்தை அதே பகுதியை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதுகுறித்து நாங்கள் ஆழ்வார்திருநகரி போலீசில் புகார் செய்தோம். ஆனால் இதுவரை அவர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த பிரச்சனையில் ஜானகிராமனுக்கு ஆதரவாக தி.மு.க அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கிருபாகரன் என்பவர் நேரடியாக தலையிட்டு எங்களை மிரட்டி வருகிறார். எனவே இது சம்பந்தமாக உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் அந்த புகார் மனுவில் கூறி உள்ளனர்.