அம்மாவின் ஆட்சி மீண்டும் எப்போது அமையும் என்று மக்கள் எதிர்ப்பார்ப்பு-முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேச்சு

தூத்துக்குடி
தாலிக்கு தங்கம், லேப் டாப் திட்டத்தை முடக்கிய விடியா தி.மு.க. அரசு மீது மக்கள் கொதிப்படைந்து இருக்கிறார்கள். அம்மாவின் நல்லாட்சி மீண்டும் எப்போது அமையும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ கூறி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கடலையூரில் அமைந்துள்ள ஸ்ரீபாம்புலி அம்மன் திருக்கோவிலில் நடைபெற்ற பங்குனி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு முன்னாள் எம்.எல்.ஏ சின்னப்பன், கோவில்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜ் ஆகியோர் தலைமையில் விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ், எட்டையாபுரம் நகர செயலாளர் ராஜ்குமார், கயத்தார் மேற்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் சாமிராஜ் ஆகியோர் முன்னிலையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் தாய் உள்ளத்துடன் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்கள் தங்கள் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்க கஷ்டப்படக்கூடாது என்பதற்காகவே தாலிக்குத்தங்கம் திட்டத்தை தமிழகத்தில் கொண்டு வந்தார். தற்போதைய விடியல் திமுக ஆட்சியில் தாலிக்கு தங்கம் தரும் திட்டத்தை நிறுத்தி விட்டது.
இதேபோல் வருங்கால இளைஞர் சமுதாயம் கல்வியில் பல்வேறு புரட்சி சாதனைகள் செய்யும் வகையில் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மடிக்கணினிகளை இலவசமாக வழங்கி மாணவ, மாணவிகள் தாங்கள் இருந்த இடத்தில் இருந்து கொண்டு மடிக்கணினி மூலம் உலகில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் நேரில் கண்டறியும் வகையில் இலவச மடிக்கணினியை அரசு மூலம் இலவசமாக வழங்கும் திட்டத்தை கொண்டு வந்து மாணவ மாணவிகளுக்கு விஞ்ஞானத்திற்க்கேற்ப்ப கல்வி கற்றிட வழிவகை செய்தார். இதையும் விடியல் திமுக அரசு நிறுத்தி விட்டது.
நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க. ஒரு வருடங்களுக்கு மேல் ஆகியும் இதுவரை தாங்கள் கூறிய எதையும் செய்யாமல் மாணவ, மாணவிகளை வஞ்சித்து விட்டது. அதேபோல் மக்களுக்கு எந்தவிதமான ஒரு நன்மைகளும் செய்யாததால் மீண்டும் தமிழகத்தில் புரட்சித்தலைவி அம்மாவின் நல்லாட்சி முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் எப்போது அமையும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்.எல்.ஏ பேசினார்.