சிறப்பு செய்திகள்

விபத்து நிகழாமல் பார்த்துக்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்-கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்

சென்னை,

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த மாதேஹள்ளியில், 18 கிராமங்களுக்கு சொந்தமான காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த, 10-ந்தேி கரக திருநாளுடன் துவங்கியது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை, தேரோட்டமும் துவங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்தனர்.

கோவிலை சுற்றி தேர் வந்தபோது, மாலை, 6:50 மணிக்கு தேரின் பின் சக்கரத்தின் அச்சாணி முறிந்தது. இதையறியாத பக்தர்கள், தேரை இழுத்த போது, பள்ளத்தில் சக்கரம் சிக்கி முன்புறமாக தேர் கவிழ்ந்தது. இதனால் தேர் பீடம் பகுதியில், 10க்கும் மேற்பட்டோர் சிக்கினர். அவர்களில் ஐந்து பேர் படுகாயமடைந்தனர். அவர்களை பக்தர்கள் மற்றும் போலீசார் மீட்டு, தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

அங்கு பாப்பாரப்பட்டியை சேர்ந்த மனோகரன், (வயது 56), சரவணன் (வயது 60) ஆகியோர் உயிரிழந்தனர். மாதேஹள்ளியை சேர்ந்த முருகேசன், மாதேஸ் உட்பட மூன்று பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் கூறுகையில், திருவிழாவின் போது, தேர் நல்ல நிலையில் உள்ளதா என்பதை ஒவ்வொரு நிலை அலுவலரும் கண்காணிக்க வேண்டும் என்ற அரசாணை இருக்கிறது.

ஆனால் இந்த தேர் பழுதாகி இருந்தது. அதை புதுப்பிக்க வேண்டும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கவனத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதை அதிகாரிகளும், இந்த ஆட்சியாளர்களும் கண்டு கொள்ளவில்லை. அதிகாரிகள், ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் இன்றைக்கு இரண்டு உயிர்கள் பறி போய் இருக்கின்றது என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அருகே பதினெட்டு கிராமகளுக்கு சொந்தமான மாதேஹள்ளி காளியம்மன் கோயில் திருவிழாவில் சக்கரத்தின் அச்சாணி முறிந்து தேர் கவிழ்ந்ததில் மனோகரன், சரவணன் ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியையும், மேலும் மூவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தியையும் அறிந்து ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளவர்கள் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தேர்த்திருவிழாவிற்கு முன்னரே தேர் நல்ல நிலையில் உள்ளதா என்பதை கண்காணிக்கவும். இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாமல் பார்த்துக்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி துணைத்தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.