சிறப்பு செய்திகள்

முதுபெரும் தமிழறிஞருமான மன்னர்மன்னன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்

சென்னை:-

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மகனும், முதுபெரும் தமிழறிஞருமான மன்னர்மன்னன் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் மகனும், முதுபெரும் தமிழறிஞருமான மன்னர்மன்னன்  ( 6.7.2020 ) உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த மன வேதனைஅடைந்தேன். மன்னர்மன்னன் தமிழக அரசின் வி.க.விருது, கலைமாமணி விருது, புதுச்சேரி அரசின் தமிழ்மாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் இந்திய விடுதலைப் போராட்டத்திலும், மொழிப்போர் போராட்டத்திலும் ஈடுபட்ட தியாகியாவார். மன்னர்மன்னன், கர்மவீரர் காமராஜர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் மற்றும் அம்மா ஆகியவர்களுடன் நெருங்கிப்பழகி, அவர்களின் அன்பைப் பெற்றவர் ஆவார். 50க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதி சிறந்த எழுத்தாளராகவும், சிறந்த பேச்சாளராகவும் திகழ்ந்தவர்.

பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாளை தமிழ்க்கவிஞர் நாளாக ஆண்டுதோறும் கொண்டாட அம்மா அவர்களின் அரசு அறிவித்த போது, அதற்கு நன்றி தெரிவித்தும், திருவள்ளூரில் நடைபெற்ற முதல் தமிழ்க்கவிஞர் நாள் விழாவில் தமது அகவை முதிர்வையும், உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் பங்கேற்று சிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மன்னர் மன்னனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், தமிழறிஞர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி அந்த இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.