நாமக்கல்

முதற்கட்டமாக 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்கள் நிரப்பப்படும் – அமைச்சர் பி.தங்கமணி பேட்டி

நாமக்கல்

மதிப்பெண்களின் அடிப்படையில் கேங்மேன் பணிகள் வழங்கப்படும். முதற்கட்டமாக 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.5 கோடியே 37 லட்சம் மதிப்பீட்டில் மேட்டூர் கிழக்குக்கரை வாய்க்கால் சீரமைப்புப் பணிகளை கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி தொடங்கி வைத்தார். பின்னர் ஆவின் நிறுவனம் சார்பில் குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகே ஆவின் பாலகத்தில் விற்பனை மையம் மற்றும் மகளிர் சுய தொழில் முனைவோர் விற்பனை அங்காடி ஆகியவற்றையும் அமைச்சர் பி.தங்கமணி திறந்து வைத்து, முதல்விற்பனையை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில், இன்று தமிழகம் முழுவதும் கேங்மேன் பணிக்கான எழுத்துத்தேர்வு எழுத, 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. தேர்வும் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தத்தேர்வில் பெறுகின்ற மதிப்பெண்களின் அடிப்படையில் கேங்மேன் பணிகள் வழங்கப்படும். முதற்கட்டமாக 5 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். நேற்றுமுன்தினம் சட்டமன்றத்தில் அறிவித்தபடி, அடுத்த கட்டமாக 5 ஆயிரம் கேங்மேன்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஏற்கனவே இரண்டு அலகுகளில் தலா 563 மெகாவாட் மின்உற்பத்தி கிடைக்கிறது. இரண்டாவது அலகு பராமரிப்பிற்காக கடந்த நான்கு மாதம் நிறுத்தப்பட்டு நேற்று, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டு, இதுவரை 350 மெகாவாட் மின்சாரம் கிடைத்துள்ளது. புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள 3 மற்றும் 4-வது அலகுகளில் உற்பத்தியாகும் மின்சாரம், முழுமையாக தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அது வருகின்ற போதுதான் தெரியும்.

பொதுமக்கள் புதிய மின் இணைப்பிற்காக ஆன்லைனில் விண்ணப்பம் செய்யும்போது, ஒரு சில இடங்களில் சர்வர் கோளாறு ஏற்படுவது உடனுக்குடன் சரி செய்யப்பட்டு வருகிறது. நேரடியாக மின்சார அலுவலகங்களில் மின் இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பம் அளிக்கும்போது காலதாமதம் ஏற்படுவதைத் தவிர்க்கவே ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. சர்வரில் மீண்டும் கோளாறுகள் ஏற்படும்போது அவை உடனுக்குடன் சரி செய்யப்படும். மின்சார வாரியத்தில் மின் கணக்கீட்டாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பணியிடங்களுக்கு மத்திய அரசின் சீ-டாக் நிறுவனம் தேர்வு நடத்த உள்ளது. அவர்கள் தேதி தந்தவுடன் எழுத்து தேர்வு நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்படும். பொறியாளர் பதவியிடத்திற்கு தமிழில் தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் செயப்பட்டு விட்டது.

1955ம் ஆண்டு தொடங்கப்பட்ட மேட்டூர் கால்வாய்த் திட்டம் மூலம் நாமக்கல், ஈரோடு சேலம் மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி அளிக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் கால்வாய் பாசன பகுதிகளுக்கு ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து 9.605 டிஎம்சி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கால்வாய் வெட்டப்பட்டு 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் குமாரபாளையம் பகுதி வழியாக தண்ணீர் கசிவு ஏற்படுகிறது.

கடைமடை வரை நிலங்களுக்கு தண்ணீர் உரிய அளவில் கொண்டு செல்ல முடியவில்லை. இதனை கருத்தில் கொண்டு, 200 மீட்டர் நீளத்திற்கு கான்கிரீட் பகுதியாக மாற்றப்படுகிறது. கால்வாயை புனரமைக்க ரூ.5 கோடியே 38 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் குமாரபாளையம் வட்டத்திற்கு உட்பட்ட அக்ரஹாரம், அய்யம்பாளையம் அக்ரஹாரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு மேட்டூர் கிழக்கு கரை கால்வாயில் இருந்து நீர் தடையின்றி கிடைக்கும்.

இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.