தி.மு.க. அமைச்சரின் அறிவிப்பு எங்களை மீண்டும் ஏமாற்றும் வேலை

வாக்களித்த எங்களை விடியா அரசு வஞ்சிக்கிறது
தகுதியுடைய குடும்ப தலைவிகளை கணக்கெடுப்பதாக கூறுவது பொய் என்றும் ஆட்சி முடியும் வரை ரூ.1,000 உரிமைத்தொகை எங்களுக்கு வழங்க மாட்டார்கள் என்றும், தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு என்று கேட்ட போது தேதி குறிப்பிட்டா சொன்னோம் என்று அன்றைக்கு கூறிய அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இப்போது தகுதியுடையவர்களை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது என்று கூறுவது எங்களை மீண்டும் ஏமாற்றும் வேலை தான் என்றும் தெரிவித்துள்ள மதுரை மாவட்ட பெண்கள், வாக்களித்த எங்களை விடியா தி.மு.க. அரசு வஞ்சிக்கிறது என்று கொந்தளிப்புடன் கூறி உள்ளனர்.
விடியா தி.மு.க. அரசின் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தகுதியுடைய குடும்பத்தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
தகுதியுடைய நபர்களுக்கு உரிமைத்தொகை வழங்குவதற்கான விவரங்களை சேகரித்து வருகிறோம். எவ்வளவு விரைவில் உரிமைத் தொகை வழங்க முடியுமோ அவ்வளவு விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
தி.மு.க. அமைச்சரின் அறிவிப்பு மக்களை ஏமாற்றும் வேலை என்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த மகளிர் கடுமையாக சாடியுள்ளனர். கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது என்று தி.மு.க. அமைச்சர் கூறுவது நாடகமே என்றும் பொதுமக்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து அமைச்சரின் தொதியை சேர்ந்த அன்னலட்சுமி என்பவர் கூறுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்குவோம் என்று கூறினார்கள். அதை நம்பி நாங்கள் ஓட்டு போட்டோம். ஆனால் தற்போது ஒரு வருடமாகியும் வழங்கவில்லை. அதேபோல் உள்ளாட்சி தேர்தலிலும் வாக்கு சேகரிக்க வந்த போது விரைவில் வழங்குவோம் என்று கூறினார்கள்.
ஆனால் இதுவரை வழங்கவில்லை. தற்போது அமைச்சர் பிடி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறுகிறார்.
இது நம்பத்தகுந்ததாக இல்லை. அதுமட்டுமல்லாது கேஸ் மானியம் 100 ரூபாய் வழங்கப்படும் என்று கூறினார்கள். அதையும் வழங்கவில்லை. கேட்டால் அதற்கும் கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது என்று தான் பதில் கூறுவார்கள்.
ஏற்கனவே எங்களை போன்ற ஏழை குடும்பங்கள் பயன் பெற்று வந்த தாலிக்கு தங்கம் திட்டம் இந்த விடியா தி.மு.க. அரசில் நிறுத்தப்பட்டு விட்டது. அம்மா ஆட்சியில் கொண்டு வரப்பட்டு நாங்கள் பயன்பெற்ற எந்தெந்த திட்டங்களை நிறுத்தப் போகிறார்கள் என்று தெரியவில்லை. ஆகவே வாக்களித்த எங்களை வஞ்சிக்கும் அரசாக இந்த விடியா தி.மு.க. அரசு உள்ளது என்று கூறினார்.
சாந்தி என்பவர் கூறுகையில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனே மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்குவோம் என்று கூறினார்கள் தி.மு.க.வினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதி என்ன ஆச்சு என்று கேட்டதற்கு நாங்கள் என்ன தேதியா கூறினோம் என்று அமைச்சரே கூறினார்.
இப்போது கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது என்று அந்த அமைச்சரே கூறுகிறார். தொகுதிக்குள் வரும்போது மக்கள் கேள்வி கேட்பார்கள் அல்லவா, அதில் இருந்து தப்பித்து கொள்வதற்காக அமைச்சர் கூறுகிறார். ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகிறது.
மாதம் 1000 ரூபாய் என்று கணக்கிட்டால் இதுவரை 12,000 ரூபாய் வரை எங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும். அப்படியானால் திட்டம் கொடுக்கும் பொழுது இதை எல்லாம் சேர்த்து எங்களுக்கு வழங்குவார்களா, ஆகவே அமைச்சர் கூறுவது நம்பும்படியாக இல்லை என்றார்.
சீதா என்பவர் கூறுகையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை தி.மு.க. அளித்தது. அதில் குறிப்பாக நாங்கள் பெண் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்குவோம் என்று முழக்கமிட்டனர். ஆனால் ஆட்சிக்கு வந்தபின் அதைப்பற்றி சிந்திக்கவே இல்லை.
இதைப்பற்றி கேட்டால் நிதி ஆதாரம் இல்லை என்று கூறுகின்றனர். அப்படியானால் தேர்தல் வாக்குறுதியில் எப்படி அளித்தீர்கள். அதுமட்டுமல்லாது துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் நிதி அமைச்சரே வெள்ளை அறிக்கை விட்டு திசை திருப்பினார். பின்பு நிதி ஆதாரம் இல்லை என்று கூறினார்.
தற்போது கணக்கெடுக்கும் பணி நடைபெறுகிறது என்று கூறியிருக்கிறார். தமிழகத்தில் எத்தனை இடத்தில் கணக்கெடுப்பு பணி நடக்கிறது என்று அமைச்சரால் விரிவாக கூற முடியுமா, எப்போதும் போல மக்களை ஏமாற்றும் வகையில் சொல்லும் வார்த்தை தான் இது. தி.மு.க. ஆட்சி முடியும் வரை ஆயிரம் ரூபாய் வழங்க மாட்டார்கள் என்றார்.
செல்வி என்பவர் கூறுகையில், அனைத்து இல்ல பெண்களுக்கும் மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்குவோம் என்று கூறவிட்டு இதுவரை தி.மு.க. வழங்கவில்லை. ஆனால் மதுரையில் ரூ.100 கோடிக்கு மேல் கருணாநிதி பெயரில் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. அரசின் சார்பில் கருணாநிதிக்கு சிலைகள். இப்படி எங்கள் வரிப்பணத்தில் ஆடம்பரமாக செலவு செய்து விட்டு. எங்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுக்க தி.மு.க. அரசுக்கு மனமில்லை.
இப்போது இதற்காக கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது நிதி அமைச்சர் கூறுகிறார் கடந்த அம்மா ஆட்சிக்காலத்தில் பொங்கல் பரிசு, கொரோனா நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை உடனடியாக வழங்கினார்கள்.
கணக்கெடுக்கும் பணி என்பது ஏற்கனவே உள்ளது. அதனை சரி செய்து இரண்டு மாதங்களிலே வழங்கி விடலாம். ஆனால் தி.மு.க. அமைச்சர் சொல்வது எங்களை மீண்டும் ஏமாற்றும் வகையில் உள்ளது என்றார்.
அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியதை அவரது தொகுதியை சேர்ந்த மகளிரே ஏற்றுக்கொள்ளவில்லை. இது ஏமாற்றும் வேலை என்று கூறியிருக்கிறார்களே. தமிழகம் முழுவதும் மகளிர் இந்த விடியா தி.மு.க. அரசு மீது என்ன நம்பிக்கையில் இப்போது இருப்பார்கள் என்பது இது ஒன்றே சான்றாகும்.