தற்போதைய செய்திகள்

ஆவடி மார்க்கெட் சாலையில் தேங்கி நிற்கும் கழிவுநீர்-பொதுமக்களுக்கு நோய்தொற்று அபாயம்

சென்னை,

ஆவடி மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள மார்க்கெட் சாலையில் எந்நேரமும் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அதிகரித்துள்ள கொசுக்களால் மக்களுக்கு நோய்தொற்று பரவும் அபாயம் உள்ளது.

ஆவடி மாநகராட்சி அலுவலகம் எதிரே மார்க்கெட் பகுதி உள்ளது. இங்குள்ள மழைநீர் கால்வாய்களை நடைபாதை கடைகள் ஆக்கிரமித்து, காய்கறி மற்றும் குப்பைக்கழிவுகளை கொட்டி வருகின்றனர். இதனால் மழைநீர் கால்வாய்கள் தூர்ந்து, சாலைகளில் எந்நேரமும் கழிவுநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

மேலும், மார்க்கெட் சாலையில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. இங்கு கொசுக்கள் உற்பத்தியாகி, அப்பகுதி மக்களுக்கு காலரா, மலேரியா உள்ளிட்ட பல்வேறு நோய்தொற்று பரவும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி ஊழியர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும், நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றவோ, கால்வாய்களை தூர்வாரி சீரமைக்கவோ இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, இப்பகுதி மக்களுக்கு நோய்தொற்று பரவலை தடுக்கும் வகையில், மார்க்கெட் சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைநீர் கால்வாய்களை தூர்வாரி சீரமைக்க சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.