தற்போதைய செய்திகள்

நெல்லை அரசு மருத்துவமனைக்கு நேரடியாக தாமிரபரணி ஆற்று தண்ணீர் – பேரவையில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தகவல்

சென்னை

நெல்லை அரசு மருத்துவமனைக்கு நேரடியாக தாமிரபரணி ஆற்று தண்ணீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில்  பாளையங்கோட்டை உறுப்பினர் மைதீன்கான் திருநெல்வேலி அரசு பொது மருத்துவமனையில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி ஏற்படுத்த அரசு முன் வருமா? என்று துணை கேள்வி எழுப்பினார். இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் திருநெல்வேலி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை 337 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக தென்காசியில் செயல்பட்டு வருகிறது.

இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளின் வசதிக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியுடன் கூடிய குடிநீர் வசதி மற்றும் கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செயல்படுகின்ற திருநெல்வேலி மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில், ரூ.6.5 கோடி மதிப்பில் 4.10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் கட்டப்பட்டு நேரடியாக தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் இந்த மருத்துவ கல்லூரிக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆண்கள் மற்றும் பெண்கள் கழிப்பிடம் கட்டுப்பட்டு சுகாதார முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. தென் மாநிலத்தில் மிக நவீன மருத்துவமனையாக திருநெல்வேலி மருத்துவனை விளங்குகிறது என்றார்.