எதிர்வரும் சவாலை எதிர்கொள்ள மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்-எதிர்க்கட்சி தலைவர் அறிவுரை

சென்னை
தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்தது மிகுந்த மனவேதனையை தருகிறது என்று கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்வரும் சவாலை எதிர்கொள்ள மாணவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், தேர்வில் தோல்வி அடைந்த மாணவர்கள் சிலர் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 11 மாணவர்களும், கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தலா 4 மாணவர்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 3 மாணவர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 2 மாணவர்களும், சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, கரூர் மாவட்டங்களில் தலா ஒரு மாணவரும் என, 28 மாணவர்கள் தற்கொலைக்கு முயன்றுள்ளனர் என்று செய்தி வெளியாகி இருக்கிறது.
இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-
10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்த 28 மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்து கொண்ட செய்தி மிகுந்த மனவேதனையை தருகிறது. தேர்வு முடிவுகள் என்பது நமது வாழ்வை தீர்மானிப்பவை அல்ல, மாணவர்கள் நெஞ்சுரம் கொண்டு எதிர்வரும் எந்த சவாலையும் எதிர்கொள்ள கற்றுக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.