தற்போதைய செய்திகள்

அப்பாவி மக்களிடம் சொத்துக்களை அபகரித்தது தான் திமுகவின் சாதனை – அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை

அப்பாவி மக்களிடம் சொத்துக்களை அபகரித்தது தான் தி.மு.க.வின் சாதனை என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.

தேவேந்திர குல வேளாளர் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் மதுரையில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூவை சந்தித்து தேவேந்திர குல வேளாளர் பொது பிரிவுக்கு பரிந்துரை செய்ததற்காக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியின்போது மாவட்ட கழக பொருளாளர் ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.எஸ்.பாண்டியன், அனுப்பானடி எஸ்.பாலகுமார், போஸ்,
கருப்புசாமி, லட்சுமணன், குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

இதன்பின்னர் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

பொய் பிரச்சாரங்கள் செய்து வரும் ஸ்டாலின் திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை சொல்ல தாயாரா என நான் சவால் விடுகிறேன். செயல்படுத்த முடியாத திட்டங்களை திமுக அறிவித்தது. திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.

திமுக ஆட்சியில் 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் என சொன்னார்கள், 2 செண்ட் நிலம் கூட கிடைக்கவில்லை, ஆனால் அப்பாவி மக்களின் நிலங்களை அபகரித்தார்கள். அதை மீட்டு கொடுத்தவர் புரட்சித்தலைவி அம்மா. தமிழகத்தை கொள்ளையடிப்பது தான் திமுகவின் ஒரே நோக்கம். மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்கள் திமுகவின் 2016 தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளது. தற்போது இதில் இரட்டை வேடம் போடுகிறது.

தமிழகத்தில் எந்தவொரு மொழியும் திணிக்கப்படவில்லை. திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி, சமஸ்கிருதம் கற்று கொடுப்பதை நிறுத்த தயாரா? தமிழகத்தில் எடப்பாடியார் அலை வீசுகிறது. எடப்பாடியார் அலையை பொறுத்துக்கொள்ள முடியாமல் பேசி வருகிறார் ஸ்டாலின்.

திமுக ஆட்சியில் சந்தித்த பிரச்சினைகளை மக்கள் மறக்கவில்லை. நேற்று வரை அறைக்குள் இருந்த நடிகர்கள் இன்று பொது வெளிக்கு வந்துள்ளனர். ரஜினி வருகையால் தமிழக அரசியலில் எந்தவொரு புதுமையும் நடக்க போவதில்லை. கழகத்தில் இருந்து யாரும் ரஜினி கட்சிக்கு செல்ல மாட்டார்கள்.

இவ்வாறு அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்.